பலன் தருகிறதா பயிர்க்காப்பீடு..? தந்தி குழுமம் நடத்திய பிரமாண்ட கருத்து கணிப்பு

பலன் தருகிறதா பயிர்க்காப்பீடு என்பதைப் பற்றி பிரமாண்ட கருத்துக் கணிப்பை நடத்தியது தந்தி குழுமம். அதில், இந்த திட்டம் பயனுள்ளதாக இருப்பதாக 59 சதவீத விவசாயிகள் பதிலளித்துள்ளனர்.
x
நாடாளுமன்ற தேர்தலுக்கு நாடே தயாராகிவரும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு கொண்டு வந்த முக்கிய திட்டங்கள் தமிழகத்திற்கு பயனளித்துள்ளதா? என்பதை அறிந்துகொள்ள, தந்தி குழுமம் பிரம்மாண்ட கருத்துக் கணிப்புகளை நடத்தி வருகிறது.  அந்த வரிசையில் இன்று இடம் பெறப் போவது பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம்.  

ஏற்கெனவே இருந்த மத்திய அரசுகள் கொண்டு வந்த விவசாய காப்பீட்டு திட்டங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போதைய காப்பீட்டுத் திட்டமான பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த ஆண்டு, தமிழகம் 100 ஆண்டுகள் காணாத வறட்சியை சந்தித்தது. 

இதற்கு முன் 2012-13-ல் பெரிய வறட்சியை கண்ட போது, அன்றைய காப்பீட்டு திட்டம் மூலம் 936 கோடி ரூபாய் இழப்பீடாக கிடைத்தது. ஆனால் நம்பிக்கை இழந்திருந்த தமிழக விவசாயிகளுக்கு, 2016-17ல் மட்டும் 3000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கிடைத்தது. இந்தியாவிலேயே தமிழகம் பெற்றது தான் அதிக இழப்பீட்டு தொகை.  

இதற்கு முன் இருந்த திட்டத்தில், 8 முதல் 10 கிராமங்கள் அடங்கிய ஒரு பிர்கா முழுவதும் சேதம் ஏற்பட்டால் தான், விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிடைக்கும். புதிய திட்டத்தில் இழப்பீடுகள் கிராம அளவில் கணக்கிடப்படுவதே பலன் கிடைப்பதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் படி, பயிர் காப்பீட்டு பிரீமியம் தொகையில் 2 சதவிகிதத்தை விவசாயிகளும், மீதமுள்ள 98 சதவிகிதத்தை மத்திய-மாநில அரசுகள் சமமாகவும் செலுத்த வேண்டும். 

உதாரணத்திற்கு, 2016-17ல் தமிழக விவசாயிகள் செலுத்திய பிரீமியம் தொகை 127 கோடி ரூபாய். மத்திய மாநில அரசுகள் இரண்டும் தலா 565 கோடி ரூபாய் கொடுத்தன. ஆண்டின் இறுதியில் விவசாயிகள் பெற்ற இழப்பீடு தொகை 3527 கோடி ரூபாய். இதே போல, 2017-18 ஆம் ஆண்டு விவசாயிகளின் பிரீமியம் 110 கோடியாகவும், மத்திய மாநில அரசுகளின் பங்கு தலா 638 கோடியாகவும் இருந்தது. ஆண்டு இறுதியில் விவசாயிகள் 1128 கோடி அளவிற்கு இழப்பீடு பெற்றனர்.

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக தமிழகம் முழுவதும் தந்தி டி.வி. தினத்தந்தி நாளிதழ், மாலைமலர், மற்றும் dt next இணைந்து விவசாயிகளிடம் பிரமாண்ட கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்த திட்டம் பயனுள்ளதாக கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு, ஆம் என்று 59% விவசாயிகள் பதிலளித்துள்ளனர். இல்லை என்று 22% பேரும், முழுமையான பயனில்லை என்று 19% பேரும் கருத்து கூறியுள்ளனர். ஒட்டுமொத்த தமிழகத்தில் 59% பேர் காப்பீட்டு திட்டம் பயனளிப்பதாக கூறியுள்ள நிலையில், டெல்டா விவசாயிகளில் சற்று கூடுதலாக 65% பேர் வரவேற்றுள்ளனர்.  

அதே போல, 2014 க்கு பின் காப்பீட்டு திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் பயனளிக்கிறது என்று 20% தமிழக விவசாயிகளும், இல்லை என்று 28% விவசாயிகளும், மேலும் மாற்றங்கள் தேவை என்று 52% விவசாயிகளும் கருத்து தெரிவித்துள்ளனர். காப்பீட்டு நிறுவனம் தரும் காப்பீட்டு தொகை இழப்பை ஈடுசெய்கிறதா என்று கேட்ட போது, ஈடு செய்கிறது என்று 14% பேரும், எதிர்பார்த்த அளவில் இல்லை என்று 84% பேரும், எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே கிடைப்பதாக 2% பேரும் தெரிவித்துள்ளனர். 

இழப்பீடு வழங்கும் முன் அதிகாரிகள் நடத்தும் கணக்கெடுப்பு முறையாக நடக்கிறதா என்ற கேள்விக்கு, 36% பேர் ஆம் என்றும் 64% பேர் இல்லை என்றும் பதிலளித்துள்ளனர். காப்பீட்டு தொகை எவ்வளவு நாட்களுக்குள் வந்து சேருகிறது என்று  கேட்டதற்கு, 3 மாதங்களுக்குள் வருவதாக 11% பேரும், 3 முதல் 6 மாதங்களில் வருவதாக 25% பேரும் 6 மாதங்களுக்கு மேல் ஆவதாக 64% பேரும் கருத்து கூறியுள்ளனர். காப்பீடு நிறுவனங்கள் செய்யும் தாமதத்தை குறைக்க, 2 மாதங்களுக்கு மேல் அவகாசம் எடுத்துக்கொண்டால் 12% வட்டியுடன் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற புதிய விதி கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்