"கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 நாட்களில் நிவாரண உதவி வழங்கப்படும்"- ஆளுநர் உறுதி

'கஜா' புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், 2 நாட்களில் நிவாரண உதவி வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
x
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், நிவாரணப் பணிகளை ஆய்வு செய்யவும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நேற்றிரவு  நாகப்பட்டினம் வந்தார்.இன்று காலை, கார் மூலம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களிடம், அவர் நேரில் குறைகளைக் கேட்டறிந்தார். அவருடன், மாவட்ட ஆட்சியர், அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் வந்திருந்தனர். வெள்ளப்பள்ளம், பழங்கள்ளி மேடு, தோப்பு துறை, மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதி மக்களை சந்தித்து, ஆறுதல் கூறினார். முகாம்களில் உள்ள சமையலறைகளையும் ஆய்வு செய்தார். அப்போது, வள்ளியம்மை என்ற இடத்தில், சரியாக உணவு வழங்கப்படவில்லை என, பொது மக்கள் குற்றம்சாட்டினர். இந்த குற்றச்சாட்டை, உடன் வந்த மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் மறுத்தார். வேதாரண்யத்தில், சமையல் எரிவாயு வாங்க நீண்ட வரிசையில் பொது மக்கள் நின்றிருப்பதை பார்த்த ஆளுநர், விரைந்து விநியோகம் செய்யுமாறு உத்தரவிட்டார். அதிகாரிகள் நேரில் வந்து பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டிய பொது மக்களிடம், 'பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும், 2 நாட்களில் நிவாரண உதவி வழங்கப்படும் என்று, அவர் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து, திருவாரூருக்கு ஆளுநர் புறப்பட்டுச் சென்றார். 

Next Story

மேலும் செய்திகள்