கமலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - டெல்லி உயர்நீதிமன்றம்

இந்து தீவிரவாதம் என பேசிய கமல்ஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
x
அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட  பள்ளப்பட்டியில் கடந்த 12ஆம் தேதி பிரசாரம் செய்த கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசியது புயலைக் கிளப்பியுள்ளது. இந்தப் பேச்சுக்கு, அதிமுக, பாஜக, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் , திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.  இந்நிலையில், இந்து தீவிரவாதம் குறித்த கமல்ஹாசனின் பேச்சுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும்  வழக்குகள் வந்த வண்ணம் உள்ளன. கரூரில் இந்து முன்னணி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சட்டப்பிரிவு 295ஏ, அதாவது இந்துக்களை இழிவு படுத்துதல், 153ஏ,  அதாவது பொது இடத்தில் மதக் கலவரத்தை தூண்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம், சென்னை மடிப்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் கமலுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கமல்ஹாசனுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் அஸ்வினி குமார் தொடர்ந்த மனு இன்று விசாரிக்கப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது ஏன்? என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தேர்தல் ஆணையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் கூட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடலாமே? என்று கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்