ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால், போராட்டம் தீவிரமடையும் என ஸ்டாலின் எச்சரிக்கை

ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால் , மாநிலத்தின் உரிமையை பாதுகாக்க, திமுக-வின் போராட்டக் கொடியும் உயரும் என்று அந்த கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால், போராட்டம் தீவிரமடையும் என ஸ்டாலின் எச்சரிக்கை
x
அரசின் திட்டங்களை, ஆளுநர் ஆய்வு செய்வது தொடரும் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கைக்கு  பதில் அளித்துள்ள அவர்,  பிரதான எதிர்கட்சியான திமுக-வை மிரட்டப் பார்ப்பதா என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்ச்சி ,  பல்கலைக்கழக நிகழ்ச்சி மற்றும்  அலுவலக பணி தொடர்பான பயணத்தின்போது  திமுக கருப்பு கொடி காட்டியதில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
அதே நேரத்தில் மாநில அரசின் உரிமை கடமை மற்றும் அதிகாரத்தில், மரபுக்கு மாறாக தலையிடுவதை எதிர்த்து தான் திமுக கருப்பு கொடி காட்டுவதாக அவர் விவரித்துள்ளார்.

இல்லாத அதிகாரத்தை, இருப்பதாக நினைத்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை,  ஆளுநர் சிறுமை படுத்துவதை திமுக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று அவர்  தெரிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் ஒன்றும்  ஆளுநர் மாளிகையில் ஒன்றும் என இரட்டை அரசாங்கம் நடத்துவதற்கு அரசியல் சட்டத்தில் அதிகாரம் அளிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால்,  கூட்டாட்சி தத்துவத்தையும் மாநில சுயாட்சியையும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமைகளையும் பாதுகாக்க,  திமுகவின் போராட்ட கொடி உயர்ந்து கொண்டே இருக்கும் என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"போட்டி அரசாங்கத்தை அனுமதிக்க முடியாது"- வைகோ 

மத்திய அரசு ஆளுநரை கொண்டு தமிழகத்தில் போட்டி அரசாங்கம் நடத்த முயல்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஆய்வு தொடர்பான ஆளுநரின் அறிக்கையில் அதிகாரத்தை பார்க்க முடிவதாக குறிப்பிட்டுள்ள வைகோ, வரம்பு மீறிய மிரட்டல் போக்கையும், நடவடிக்கையையும் ஆளுநர் நிறுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 


ஆய்வு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் : "போராட்டங்களை தீவிரப்படுத்துவதாகவே அமையும்" - இந்திய கம்யூ.

இதனிடையே, ஆளுநர் ஆய்வு குறித்து அளிக்கப்பட்டுள்ள விளக்கம் போராட்டங்களை தீவிரப்படுத்துவதாகவே அமையும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. ஜனநாயக வழிமுறையில் போராடுபவர்களை ஆளுநர் எச்சரிப்பது அமைதியை சீர்குலைக்கும் ஜனநாயக விரோதச் செயல் எனவும் அந்த கட்சி கூறியுள்ளது. ஆளுநர் தனது தவறான செயல்பாட்டை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் முத்தரசன் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.


"ஆளுநர் ஆய்வு செய்ய வருவதில் தவறில்லை" : திமுக-வினர் கைது ஏன்? - முதலமைச்சர் விளக்கம்


Next Story

மேலும் செய்திகள்