'காற்றுவெளியிடை'யின் ஆலோசகராக இருந்த அபிநந்தனின் தந்தை : நிஜமானது காற்றுவெளியிடை படக் காட்சிகள்...

பாகிஸ்தானிடம் சிக்கிய அபிநந்தனின் தந்தை வர்த்தமான் ஒரு சினிமாவுக்காக செய்த சம்பவங்கள், அவரின் நிஜவாழ்வில் நடந்திருக்கிறது.
காற்றுவெளியிடையின் ஆலோசகராக இருந்த அபிநந்தனின் தந்தை : நிஜமானது காற்றுவெளியிடை படக் காட்சிகள்...
x
பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் தந்தை வர்த்தமான் ஏர் மார்ஷலாக இருந்து ஓய்வுபெற்றவர். திருவண்ணாமலை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட வர்த்தமான் குடும்பம், 20 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு இடம்பெயர்ந்துவிட்டது. சென்னை சேலையூர் அருகே மாடம்பாக்கத்தில் வர்த்தமான் குடும்பம் வசித்து வந்த நிலையில், அவரின் மகன் அபிநந்தன் இந்திய விமானப்படையின் விங் கமாண்டராக  பணியாற்றிவருகிறார். அபிநந்தனின் மனைவி தன்வி மர்வஹா மற்றும்  இரண்டு மகன்கள் டெல்லியில் வசித்து வருகின்றனர். 

எம்.ஐ.ஜி 21 பைசன் ஜெட் போர் விமானத்தில்  எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதிக்கு சென்ற விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் வசம் தற்போது உள்ளார்.  அவரை மீட்க தூதரக ரீதியில் இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானில் அபிநந்தன் சிக்கியது, மணிரத்னம் இயக்கிய காற்றுவெளியிடை படத்தில் நடந்த நிழான காட்சிகள், வர்த்தமான் குடும்பத்தில் நிஜமாகி இருக்கிறது. 

2017ஆம் ஆண்டு விமானப்படை விமானியை கதைநாயகனாக கொண்டு காற்றுவெளியிடை என்ற திரைப்படத்தை உருவாக்க இயக்குநர் மணிரத்னம் திட்டமிட்டு, அதற்கு ஆலோசகராக இருக்குமாறு அபிநந்தனின் தந்தை வர்த்தமானை அணுகியுள்ளார். கார்கில் போரின்போது கிழக்கு பிராந்திய ஏர் கமாண்ட் தலைவராக இருந்தவர், வர்த்தமான். காற்றுவெளியிடை படத்தின் நாயகன், கார்கில் போரின்போது பாகிஸ்தானிடம் மாட்டிகொள்வதுதான் கதை. இதனால் அபிநந்தனின் தந்தை வர்த்தமானின் உதவி, படத்திற்கு பலமாக இருக்கும் என இயக்குநர் மணிரத்தனம் எண்ணினார். 

காற்று வெளியிடை படத்தின் நாயகன் கார்த்தி கார்கில் போரின்போது தவறுதலாக பாகிஸ்தான் பகுதிக்குள் மாட்டிக் கொள்வார். அவரை பாகிஸ்தான் படையினர் சிறை பிடித்து சித்திரவதை செய்வார்கள். இந்தக் காட்சிகளுக்கு ஆலோசகராக செயல்பட்டவர் வர்த்தமான். இந்த நிழலான காட்சிகள், வர்த்தமானின் குடும்பத்தில் நிஜ சம்பவமாகியிருப்பது வேதனையானது.

பாதுகாப்புப் படையில் பணி புரிபவர்களின் வாழ்வில் எதுவுமே உத்தரவாதம் இல்லை என்பது அவர்களின் குடும்பத்தினர் நன்கு உணர்ந்தவர்கள்தான். ஆனால், தான் கனவில் கண்ட காட்சிகள் நிஜமாகும் என்பதை அபிநந்தனின் தந்தை வர்த்தமான் கனவில் கூட நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்.   

நடிகர் கார்த்தி கருத்து : 



காற்று வெளியிடை படத்தின் நாயகன் கார்த்தி, அபிநந்தன், பாகிஸ்தானிடம் சிக்கியதை அறிந்ததும் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இந்திய விமானப்படையின் மிகச் சிறந்த பைலட்டுகளை தாம் சந்திக்க நேர்ந்தது அதிர்ஷ்டவசமானது என்றும்,  படத்திற்காக அவர்களை சந்தித்தபோது தான் மிகவும் பெருமைப்பட்டதாகவும் நடிகர் கார்த்தி குறிப்பிட்டுள்ளார். நமது வீரர் பத்திரமாக திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் நடிகர் கார்த்தி உருக்கமாக தெரிவித்திருக்கிறார். 

நடிகர் கார்த்தி மட்டுமல்ல, அவரை போன்ற பிரபலங்கள் முதல் சாமானியர் வரை ஒவ்வொரு இந்தியரும் அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கியதை எண்ணி வேதனைபடுகிறார்கள். அபிநந்தன் நிச்சயம் பத்திரமாக தாயகம் திரும்புவார் என்ற நம்பிக்கை ஒவ்வொருவரின் உணர்விலும் உள்ளது. வர்த்தமானின் ஆலோசனையில் நிழலாக உருவான காற்று வெளியிடை படத்தில் நாயகன் கார்த்தி பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்டு வந்தார். அதேபோல், வர்த்தமானின் மகன் அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்டு வருவார்.


Next Story

மேலும் செய்திகள்