

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை பல்வேறு நிலைகளில் 13 ஆயிரம் பணியாளர்களை தேர்ந்தெடுக்க விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் உள்ளிட்ட பல தகவல்கள் தெளிவாக கொடுக்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. 200 மதிப்பெண்களுக்கு 40 மதிப்பெண்கள் இந்தி மொழியில் கட்டாயமாக எடுக்க வேண்டுமெனவும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தி தெரியாத மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும் என்று விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
60 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்தி தெரியாத விண்ணப்பதாரர்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது இந்திய அரசியல் சட்டத்திற்கும் நீதித்துறையின் வழிகாட்டுதலுக்கும் எதிரானது என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அவருக்கு திமுக மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு கடிதம் எழுதியுள்ளார்.