India vs China|Operation Sindoor | இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நரித்தனம் - சதியை உடைத்த ரிப்போர்ட்
இந்தியாவின் ரபேல் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக சீனா போலி பிரசாரம் - அதிர்ச்சி ரிப்போர்ட் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலில் இந்தியாவின் ரபேல் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக சீனா போலி பிரசாரத்தை சமூக வலைதளங்களில் மேற்கொண்டதாக அமெரிக்க ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரில், இந்திய விமானப்படையின் நவீன போர் விமானமான ரபேல் விமானங்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் சொல்லி வருகிறது. இதனை நிராகரித்த இந்திய விமானப்படை, பாகிஸ்தான் வைத்திருக்கும் அமெரிக்கா தயாரிப்பு எப்-16 போர் விமானம், சீன தயாரிப்பு JF-17 விமானம் உள்பட பாகிஸ்தானின் 6 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தது இதற்கிடையே இந்தியாவின் ரபேல் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக சீன ஊடகங்கள் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை வெளியிட்டன. அப்போதே சீனாவில் இருக்கும் இந்திய தூதரகம், சீன ஊடக தகவலை நிராகரித்தது. இந்த சூழலில், அமெரிக்க நாடாளுமன்றத்தில், அந்நாட்டின் அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறு ஆய்வு ஆணையம் வருடாந்திர ஆய்வறிக்கையை வழங்கியிருக்கிறது. அதில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பிரான்சின் ரபேல் விமானங்களின் வலிமையையும், விற்பனையையும் மட்டுப்படுத்த சீனா சமூக வலைதளங்களில் பொய் பிரசாரத்தை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போலியாக சமூக வலைதள கணக்குகளை உருவாக்கிய சீனா, ரபேல் விமானங்கள் சிதைந்தது கிடப்பது போல் செயற்கை தொழில்நுட்பத்தில் போலி புகைப்படங்கள், வீடியோக்களையும் உருவாக்கி அதனை பரப்பியதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானை பொறுத்த வரையில் 80% ஆயுதங்களை சீனாவிடம் வாங்குகிறது. இந்த சூழலில் ஆபரேஷன் சிந்தூரில், சீனா தயாரித்த ஆயுதங்கள் எல்லாம் சிறப்பாக செயல்பட்டதாக காட்டுக்கொள்ள சீனா போட்டோஷாப் ஒர்க் செய்து சமூக வலைதளங்களில் போலி பிரசாரம் செய்தது அம்பலமாகியிருக்கிறது. அதாவது சீனாவின் பாதுகாப்பு தளவாட விற்பனையை அதிகரிக்க, பிரான்ஸ் ஆயுத ஏற்றுமதியை சேதப்படுத்தும் வகையில் சீனா பிரசாரத்தை செய்ததாக அமெரிக்க ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி பிரசாரம் வாயிலாக இந்தோனேஷியா, பிரான்சிடம் இருந்து போர் விமானங்களை வாங்கும் விவகாரத்தில் சீனா உள்ளடி வேலையை பார்த்திருப்பதாகவும் அமெரிக்க ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, பிரான்சிடம் இருந்து கூடுதலாக ரபேல் விமானங்களை வாங்க இந்தோனேஷியா தீவிரம் காட்டியது. ஆனால் திடீரென சீனாவிடம் இருந்து J-17 விமானங்களை வாங்கப்போவதாக இந்தோனேஷியா தெரிவித்தது. இந்தோனேஷியாவின் இந்த முடிவு சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இப்போது இந்தோனேஷியாவின் இந்த முடிவில் சூழ்ச்சியிருப்பதை அமெரிக்க ஆய்வறிக்கை வெளிக்காட்டியிருக்கிறது. அதாவது, பிரான்சிடம் இருந்து ரபேல் விமானங்களை வாங்குவதை நிறுத்த இந்தோனேஷியாவை சீன தூதரக அதிகாரிகள் சரிசெய்ததாக அமெரிக்க ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.