பொங்கல் வரை காத்திருக்கும் மழை.. "தப்பிய 2024.. 2025 தொடக்கத்திலேயே.." எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் பொங்கல் வரை மழை தொடர வாய்ப்புள்ளதாகவும், பொங்கலுக்கு பிறகே வடகிழக்கு பருவமழை விலகுவது குறித்து தெரிய வரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில், 2024-ஆம் ஆண்டு மழைப்பொழிவு விவரங்களை செய்தியாளர்களிடம் அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது, 2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாடு புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மொத்தம் ஆயிரத்து 179 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருப்பதாக கூறினார். அதாவது இயல்பைவிட 28 சதவீதம் மழை அதிகமாக பதிவாகி இருப்பதாகவும் அவர் கூறினார்.
தென்மேற்கு பருவமழை காலத்தில் நெல்லை மாவட்டத்தில், இயல்பை விட அதிகமாக 265 சதவீதம் மழை பதிவாகி இருப்பதாகவும், வடகிழக்கு பருவமழை பொறுத்தவரை நெல்லை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் இயல்பை விட மிக அதிகமாக பெய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில், பொங்கல் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், பொங்கலுக்கு பிறகு வடகிழக்கு பருவமழை விலகுவது குறித்து தெரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.