Erode | கணவன் மூளைக்குள் சந்தேக சாத்தான் - தவமிருந்து பிறந்த ஆண் குழந்தை.. அதிர வைத்த வாக்குமூலம்

Update: 2025-06-29 04:21 GMT

மனைவியையும், ஒன்றரை வயசு மகனையும் கொலை செஞ்சிட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு நாடகமாடி இருக்காரு கணவர்...

திருமணமாகி முதல் மூணு வருஷமா குழந்தை இல்லையேனு Feel பண்ண தம்பதி.. அழகான ஆண் குழந்தை பிறந்ததும் சந்தேகப்பட்டது தான் இரண்டு கொலைக்கான காரணமா ?

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியில் பெத்த தாயே ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தங்களுடைய மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளது. அவருடைய கணவர் தான் கொலை செய்திருப்பார் என குற்றம்சாட்டி வந்த நிலையில் தற்போது அது உண்மையாகி இருக்கிறது.

மனைவியையும், தவமிருந்து பெத்த மகனையும் கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய அந்த கொலைகார கணவரின் பெயர் கவின் பிரசாத்.

வெள்ளோடு அருகேயுள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர். தனியார் பனியன் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்த கவின்பிரசாத்துக்கும் அமராவதி என்கிற பட்டதாரி இளம்பெண்ணுக்கும் ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

எல்லாருடைய இல்லற வாழ்க்கையை போலவே இவர்களுடைய வாழ்க்கையும் விருந்து உபசரிப்பு என அமோகமாக தொடங்கி உள்ளது.

ஆனால், திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியும் இந்த தம்பதிக்கு குழந்தைபேறு இல்லை. சீக்கிரம் குழந்தையை பெற்றுக்கொடுக்க சொல்லி கவின் பிரசாத்தின் பெற்றோர் அமராவதிக்கு அதீத அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனால் சில காலங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அமராவதி கோவில் குளமாக சுற்றி வந்த போதுதான் அவருடைய வயிற்றில் குழந்தை எட்டி உதைத்திருக்கிறது.

மூன்று ஆண்டுகள் கழித்து கருவுற்ற காரணத்தால் இவர்களின் வளைகாப்பு ஃபங்கஷனும் ஜாம்ஜாம் என நடைபெற்றிருக்கிறது.

எனினும், குழந்தை பிறந்த பிறகு கவின் பிரசாத்தின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்திருக்கிறது. இந்த குழந்தை என்னை மாதிரியே இல்லை என சந்தேகப்பட்டு உள்ளார். இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை சச்சரவு நடந்துள்ளது. ஒருகட்டத்தில் பொறுமையிழந்த அமராவதி “ஆமா, இந்த குழந்தை உன்னை மாதிரியே இல்ல அதுக்கு என்ன இப்போ..?“ எனக் கடுப்பாகி திட்டி உள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கவின் பிரசாத் சம்பவம் நடந்தன்று மனைவியை கழுத்தை நெறித்து முதலில் கொலை செய்துள்ளார்.

அதன்பிறகு கட்டிலில் படுத்திருந்த ஒன்றரை வயது மகனின் முகத்தில் தலையணையால் அழுத்தி மூச்சை நிறுத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து என்ன செய்வதென தெரியாமல் நின்றவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து குடும்ப பிரச்சனையில் மனைவியே தன்னுடைய மகனை கொலை செய்துவிட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அழுது நாடகமாடி உள்ளார் கவின் பிரசாத் .

இந்த சம்பவத்தில் கவின் பிரசாத்தை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், இந்த கொலையில் நிச்சயமாக அவருடைய குடும்பத்தினரும் உடந்தையாக இருந்திருப்பார்கள் என்கிற குற்றச்சாட்டை அமராவதியின் குடும்பத்தினர் முன்வைத்து எஸ்.பி அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளனர்.

முழுமையான விசாரணைக்கு பிறகே நடந்த இரட்டை கொலையில் கவின் பிரசாத் குடும்பத்தினரின் பங்களிப்பு என்ன ? யார்..? யார்..? என்னென்ன குற்றத்தை செய்தார்கள் ? எப்படி.. எப்படி..யெல்லாம் வாழ வந்த பெண்ணை கொடுமைப்படுத்தினார்கள் என்கிற முழுவிபரமும் வெளிச்சத்திற்கு வரும்.

Tags:    

மேலும் செய்திகள்