சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மலைக்கு சென்று பக்தர்கள் தினமும் சென்று வழிபாடு நடத்த மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அனுமதி வழங்கியுள்ளது. சுந்தரபாண்டியம் பகுதியை சேர்ந்த சடையாண்டி என்பவர் சதுரகிரி மலை கோயிலுக்கு சென்று 10 நாட்கள் வழிபடவும், இரவில் தங்கவும் அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, சதுரகிரி மலையில் தினமும் கடவுளை வழிபட பக்தர்களை காலை 6 மணி முதல் காலை 10 மணிவரை வனத்துறை சோதனைச்சாவடி வழியாக அனுமதிக்க வேண்டும் என்றும், தரிசனத்திற்குப் பின் பக்தர்கள் மாலை 4 மணிக்குள் பாதுகாப்பாக மலையடிவாரத்தை அடைய ஏதுவாக, காலை 10 மணிக்கு நுழைவு வாயிலை கண்டிப்பாக மூட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இரவில் யாரும் அனுமதியின்றி மலையில் தங்க கூடாது என்றும் இரவில் தங்கும் பக்தர்களை கைது செய்ய வேண்டும் எனவும், நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.