"காரைவிட்டு ஏத்தீட்டு சிரிச்சிட்டு போறான்" விபத்து போல் அரங்கேற்றப்பட்ட கொலை?
சென்னையில் இளைஞர் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட சம்பவத்தில், அவர் கார் ஏற்றி கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் அபிஷேக், தனது நண்பர் நிதின் சாயுடன் திருமங்கலம் பகுதியில் பைக்கில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்து கார் மோதியதில், ஹெல்மெட் அணியாமல் சென்ற நிதின் சாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
எனினும், இது விபத்து அல்ல கொலை எனக்கூறி உயிரிழந்த நிதின் சாயின் உறவினர்கள் கீழ்ப்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து திருமங்கலம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் பிரணவ் என்ற இளைஞர் பள்ளி மாணவியை காதலித்து வந்ததாகவும்,
அதே மாணவியுடன் கல்லூரி மாணவர் வெங்கடேஷ் என்பவர் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதில், பிரணவுக்கும் வெங்கடேஷ்க்கும் மோதல் வெடிக்க, பிரணவுக்கு ஆதரவாக கவுன்சிலர் தனசேகரனின் பேரன் சந்துரு காரில் வந்து வெங்கடேஷை மிரட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பதிலுக்கு வெங்கடேஷ்க்கு ஆதரவாக அபிஷேக்கும் நிதின் சாயும் வர, இருதரப்பினரும் அண்ணா நகர், திருமங்கலத்தில் சண்டையிட முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் முடிவில், நிதின் சாய் சென்ற இருசக்கர வாகனம் மீது சந்துரு தரப்பினர் காரில் இடித்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது திட்டமிட்ட கொலை என உயிரிழந்த நிதினின் தாயாரும் குற்றம்சாட்டியுள்ளார்.