தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்து தருவதாக கூறி மோசடி செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த முத்துலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி போலியான அரசு முத்திரை, போலியான ஆணையை வழங்கி ஏமாற்றியதாக தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் பரணிதரன், ரோகினி பிரியா, அப்துல் நாசர், ரேவதி, மற்றும் குற்றச் செயலுக்கு மூளையாக செயல்பட்ட கஜேந்திரன், சாமுண்டீஸ்வரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் கஜேந்திரன் கூட்டாக சேர்ந்து 200 பேரிடம் இருந்து 5கோடி ரூபாய் வரை பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்தது தெரிய வந்தது. மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ளவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.