மகளிர் உரிமை தொகை பெறவில்லையா? | வெளியான புதிய அப்டேட்

Update: 2025-06-29 14:19 GMT

மகளிர் உரிமை தொகை விதிகள் தளர்வு - தமிழக அரசு

மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விதிகளை தளர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் விடுபட்ட பெண்களை சேர்க்க அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்க உள்ள உங்களுடன் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி மூலம் விண்ணப்பம் பெறப்பட உள்ளது.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் திருத்தப்பட்ட விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான தகுதிகளில் 3 பிரிவுகளில் தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. அதன்படி ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில், ஓய்வூதியதாரர் அல்லாத தகுதியான பெண்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதேபோன்று இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு திட்டங்களின் கீழ் மானியம் பெற்று அதன் மூலம் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள், பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்