டிக்கெட் பண்டலை தொலைத்த கண்டக்டர்.. ஊதியத்திலிருந்து ரூ.36000 பிடித்தம்ஐகோர்ட் போட்ட உத்தரவு
டிக்கெட் பண்டலை தொலைத்த கண்டக்டர்..
ஊதியத்திலிருந்து ரூ.36000 பிடித்தம்
ஐகோர்ட் போட்ட உத்தரவு
டிக்கெட் பண்டலை தொலைத்த நடத்துனரின் ஊதியத்திலிருந்து 36 ஆயிரம் ரூபாயை பிடித்தம் செய்த அரசு போக்குவரத்து கழகத்தின் உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மண்டலத்தில் நடத்துனராக பணியாற்றும் ஏ.பிரபாகரன், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நேரக்காப்பாளரிடம் டிக்கெட் பண்டலை வாங்கிவந்து, ஓட்டுனர் இருக்கையின் இடது புறத்தில் வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த பண்டல் காணாமல் போன நிலையில், உடனடியாக போக்குவரத்து கழக நிர்வாகத்தில் புகார் செய்தார்.
ஆனால், டிக்கெட் பண்டலின் தொகையான 36 ஆயிரத்து 103 ரூபாயை சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்ய 2010ஆம் ஆண்டு நவம்பரில் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டு, மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாய் வீதம் பிடித்தம் செய்தது. இதை எதிர்த்து பிரபாகரன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், காணாமல் போன டிக்கெட்களுக்கான தொகையை நடத்துனர்களிடம் வசூலிக்கக் கூடாது என இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, நடத்துனர் பிரபாகரன் மீதான நடவடிக்கை தொடர்பான உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். பிடித்தம் செய்த தொகையை திரும்ப தருவது குறித்து 4 வாரங்களுக்குள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.