முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்து, நடைமுறைக்குக் கொண்டு வர பிரத்யேகக் குழுவை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கருணாநிதியின் நூற்றாண்டு விழா வரும் ஜூன் 3ல் தொடங்கவுள்ளது. இந்நிலையில், பொதுப்பணித் துறை அமைச்சராகவும், முதல்வராகவும் கருணாநிதி பதவி வகித்த காலங்களில் அவர் ஆற்றிய பணிகளை ஆய்வு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்ற நிலையில், இக்கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கருணாநிதி ஆற்றிய பணிகளை, இன்றளவும் நினைவில் உள்ள திட்டங்கள், தோற்றுவித்த நிறுவனங்கள், நிறுவிய கட்டடங்கள், சீா்திருத்தங்கள் என 4 பிரிவுகளாக வகைப்படுத்தி, துறைவாரியாக கருணாநிதியின் பன்முகத் தன்மைகளை ஆராயும் வகையில் பிரிக்கப்பட்ட 12 தலைப்புகள் தொடா்பான விவரங்களை தமிழக அரசுக்கு சம்பந்தப்பட்ட துறைகள் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. துறைகள் வாரியான தொகுப்புகள் மற்றும் திட்டங்களை ஆய்வு செய்ய 6 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்குப் பிறகு அவற்றைச் செயல்படுத்துவதற்காக, துறைகள் வாரியாக அமைச்சா்கள் தலைமையில் துறைச் செயலா்களை உறுப்பினா்களாக கொண்ட குழுக்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.