சுதந்தர இந்தியாவின் முதல் வாக்காளர் சியாம்சரண் 106 வயதில் மறைவு

Update: 2022-11-05 15:03 GMT

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான106 வயது சியாம் சரண் நேகி இன்று காலமானார்.

இமாச்சலப்ப்பிரதேச மாநிலம் கின்னௌர் மாவட்டத்தில் உள்ள தன் சொந்த ஊரான கல்பாவில் இன்று காலை அவர் இயற்கை எய்தினார்.

கடல்மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள கல்பா கிராமத்தில், 1951 அக்டோபர் 25ஆம் தேதியன்று முதல் முதலில் நேகி பொதுத்தேர்தலில் வாக்களித்தார்.

கல்பா கிராமத்தை உள்ளடக்கிய அப்போதைய மண்டி- மகசு மக்களவைத் தொகுதியில், கடும் குளிர், பனிப்பொழிவு காரணமாக, முன்கூட்டியே முதல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. நாட்டின் மற்ற பகுதிகளில் 1952 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்தான் வாக்குப்பதிவு நடைபெற்றது.

சியாம் சரண் நேகி அப்போது பள்ளி ஆசிரியராக இருந்த நிலையில், கல்பா கிராம வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாகச் சென்று, தன் வாக்கைப் பதிவுசெய்தார். ஆனால், தன்னுடைய வாக்குதான் இந்தியாவின் முதல் வாக்கு என அவருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

அப்போதிருந்து வாக்களிக்க மட்டும் நேகி தவறவே இல்லை. கடந்த 2ஆம் தேதியன்று தன் 34ஆவது வாக்கை இமாச்சல் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவுசெய்துள்ளார்.

2014ஆம் ஆண்டில் இமாச்சலப்பிரதேச தேர்தல் ஆணையம், நேகியை தேர்தல் விழிப்புணர்வுத் தூதராக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்