கால் அழுகிய நோயாளியை சாலையில் வீசிய அரசு ராஜாஜி மருத்துவமனை ஊழியர்கள் - மதுரையில் அதிர்ச்சி
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே, பிரகாஷ் என்ற ஆதரவற்ற கூலித்தொழிலாளி காலில் பெரிய புண்ணுடன் சாலையோரம் கிடந்தார். இவரை மீட்ட ரெட்கிராஸ் அமைப்பினர், அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் இவரை மீண்டும் சாலையில் வீசிச் சென்றனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியினர் நோயாளியை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், பணியின்போது அலட்சியமாக இருந்ததாக 2 பயிற்சி மருத்துவர்கள், செவிலியர், மருத்துவமனை ஊழியர் ஆகிய 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து பாலரெங்காபுரம் அரசு மருத்துவமனைக்கு பணியிடமாற்றம் செய்து, மருத்துவமனை டீன் ரத்னவேல் நடவடிக்கை எடுத்துள்ளார்.