3 தொடர் தோல்விகள்.. மகன் விட்டுச்சென்றதை பிடிப்பாரா தந்தை? - EVKS இளங்கோவனின் அரசியல் பயணம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் குறித்து, இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

Update: 2023-01-23 02:58 GMT

Full View

பெரியார் வீட்டு பேரனான ஈவிகேஎஸ்.இளங்கோவன், சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படும் ஈ. வெ. கி.சம்பத் - சுலோசனாசம்பத் தம்பதிக்கு, 1948, டிசம்பர் 21ஆம் தேதி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் பிறந்தார். ஈவிகேஎஸ்.இளங்கோவன் மனைவி பெயர் வரலட்சுமி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள். சென்னை மாநிலக்கல்லூரியில் BA பொருளாதாரம் படித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, ஈவிகேஎஸ் இளங்கோவனை அரசியலுக்கு அழைத்து வந்தார்.

தொடர்ந்து, கடந்த 1984 -ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டசபைக்குள் நுழைந்தார். பின்னர் 1996-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்தார். தொடர்ந்து 1998 -2000-ம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2000-முதல் 2003-வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பு தலைவராக இருந்தார். அதைத் தொடர்ந்து கடந்த 2004ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலில், கோபி தொகுதியில், திமுக கூட்டணியில் போட்டியிட்டு 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அந்த காலகட்டத்தில் 2004 முதல் 2009 வரை அவர் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சராக இருந்தார். 2009ஆம் ஆண்டு ஈரோடு மக்களவை தொகுதி, 2014இல் திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அவர் இரண்டிலும் தோல்வியடைந்தார். கடந்த 2014 முதல் 2017ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்துள்ளார். கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாட்டில் 39 இடங்களில் 38இல் வென்றது. இருப்பினும், ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்ட தேனியில் மட்டும் அவர் தோல்வி அடைந்தார்.

தேர்தல்களில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து இருந்தாலும் காங்கிரஸ் கட்சியில் ஆக்டிவான அரசியல்வாதியாகவே இப்போதும் இருந்து வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன், தனது அதிரடி பேச்சுக்களாலும், செயல்பாட்டாலும் தமிழக மக்களின் கவனம் பெற்றவர்.

Tags:    

மேலும் செய்திகள்