தடகள பயிற்சியாளர் மீது பாலியல் புகார் - அடுத்தடுத்து வெளிவரும் புகார்களால் பரபரப்பு

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான சர்ச்சையை தொடர்ந்து சென்னையின் பிரபல தடகள பயிற்சியாளர் மீதும் பாலியல் புகார்கள் அடுத்தடுத்து கிளம்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.;

Update: 2021-05-28 07:33 GMT
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான சர்ச்சையை தொடர்ந்து சென்னையின் பிரபல தடகள பயிற்சியாளர் மீதும் பாலியல் புகார்கள் அடுத்தடுத்து கிளம்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பள்ளி மாணவிகளிடம் அத்துமீறினார் என்ற புகார்கள் வெளிவந்ததை தொடர்ந்து சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். இதே பள்ளியில் மேலும் 3 ஆசிரியர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகவும், பல ஆண்டுகளாக இந்த அத்துமீறல் தொடர்ந்ததாகவும் அவர் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இதனிடையே, பள்ளி நிர்வாகத்தினரிடம் போலீசார் மற்றும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.  இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு பள்ளிகளிலும் அடுத்தடுத்த புகார்களும் வெளிவந்தன. முன்னாள் மாணவிகள், இந்நாள் மாணவிகள் என பலரும் சமூக வலைதளங்களில் புகார்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர். 

இதனிடையே, 99 என்ற படத்தில் நடித்த நடிகை கவுரி கிஷன், தான் படித்த பள்ளியை பற்றியும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அடையாறில் உள்ள பள்ளியில் படித்தபோது ஆசிரியர்கள் அநாகரீகமாக நடத்தியதாகவும், சாதியை சுட்டிக்காட்டியும், உடல் அமைப்பை கிண்டல் செய்து பேசியதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். 

இந்த நிலையில் தான் சென்னையை சேர்ந்த பிரபல தடகள பயிற்சியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாரிமுனை பகுதியில் தனியார் தடகள பயிற்சி மையத்தை நடத்தி வரும் அவர் மீது இணையத்தில் பலரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். 

ஏராளமான தடகள வீரர், வீராங்கனைகளை உருவாக்கியதாக அறியப்பட்ட அவர் மீது, இப்போது பாலியல் புகார்கள் கிளம்பியிருப்பதால் விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

தடகள வீராங்கனை ஒருவர் தனக்கு நேர்ந்த சம்பவத்தை இணையத்தில் வெளியிடவே, அது இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பயிற்சியாளரால் வீராங்கனைகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும் கனவுகளோடு வரும் பலரை தன் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டதாகவும் அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

15 வயது வீராங்கனைகளையும் பயிற்சியாளர் விட்டு வைப்பதில்லை என கூறியிருப்பதோடு இதுவரை 20க்கும் மேற்பட்டோர் அவரால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது அந்த பதிவு... இவரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பலரும் விளையாட்டு துறையை விட்டுவிட்டு வெளியேறியதாகவும் சம்பந்தப்பட்ட மாணவி பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். 

தடகள சங்கத்தில் சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் பற்றி கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாகவே பயிற்சியாளர் மீது பல்வேறு புகார்கள் வந்து கொண்டுள்ளன. இந்த விவகாரத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்