ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.30 லட்சம் இழப்பு - பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொண்ட இளைஞர்
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 30 லட்ச ரூபாய் இழந்த விரக்தியில் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் துயரமான முடிவை எடுத்துள்ளார்.;
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 30 லட்ச ரூபாய் இழந்த விரக்தியில் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் துயரமான முடிவை எடுத்துள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? இப்போது பார்க்கலாம்....
புதுச்சேரி கோர்க்காடு கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். 36 வயதான இவர், சிம் கார்டு விற்பனை மற்றும் ரீசார்ஜ் செய்வதற்கான விநியோக உரிமையை எடுத்து நடத்தி வந்தார்.
இவருடைய மனைவி மது... இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில் 2 குழந்தைகளும் உள்ளனர். சொத்துகள் எதுவும் இல்லாத சூழலிலும், தன் சொந்த உழைப்பால் முன்னேறி தன் மனைவி, பிள்ளைகளின் தேவைகளை நிவர்த்தி செய்து வந்துள்ளார்.
தொழிலில் நல்ல வருமானம் மற்றும் மகிழ்ச்சியான குடும்பம் என நிறைவாக வாழ்ந்து வந்த இவருக்கு எமனாக வந்து சேர்ந்தது ஆன்லைன் ரம்மி.
ஆரம்பத்தில் சிறிய அளவில் பந்தயம் கட்டி ஆயிரங்களில் பணத்தை ஜெயித்து வந்தார் விஜயகுமார். பணம் கையில் கிடைக்க கிடைக்க அதுவே போதையாக உருமாறியது அவருக்கு. ஒரு கட்டத்தில் இதை விட்டு விலகவே முடியாது என்ற நிலைக்கு ஆளாகி உள்ளார் அவர்...
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மியில் மூழ்கி கிடந்த விஜயகுமார், இதுவரை 30 லட்ச ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இறப்பதற்கு முன்பாக அவர் தன் மனைவிக்கு உருக்கமான ஆடியோ ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார் விஜயகுமார்...
ஆன்லைன் விளையாட்டால் தன் வாழ்க்கையே பறி போனதாக கண்ணீருடன் அவர் உருக்கமாக கூறியிருப்பது பலருக்கும் படிப்பினை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது...
தன்னை போல யாரும் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் சிக்கிவிடக் கூடாது என்ற எண்ணம், அவரின் மரண முடிவுக்கு முன்பாக வெளிப்பட்டிருப்பதும் சோகம்... எப்படியும் இதை தடுத்து நிறுத்தி விடு என மனைவிக்கு உருக்கமாக கூறிய பின் தன் உயிரை விட்டிருக்கிறார் விஜயகுமார்...
ஆன்லைன் ரம்மி போதையில் சிக்கி இளைஞர்கள் அடுத்தடுத்து பலியாகி வரும் நிலையில் இப்போது புதுச்சேரியில் நடந்திருக்கும் இந்த சம்பவம் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தினால் அது பல இளைஞர்களை நல்வழிப்படுத்தும் என்பதில் மாற்றமில்லை....