சக பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்ட பாதுகாப்பு படை வீரர் - 7 குண்டுகள் பாய்ந்ததில் பாதுகாப்பு வீரர் உயிரிழப்பு

ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு வீரர் சக வீரரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-01-31 08:43 GMT
சென்னை ஆவடியில் உள்ள பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான கனரக வாகன தொழிற்சாலையில் 2 நாட்களுக்கு முன்பு  பணிக்கு சேர்ந்துள்ளார் நிலாம்பர் சின்கா என்பவர். திரிபுரா மாநிலத்தை சேர்ந்த நிலாம்பர் சின்கா இமாச்சல் பிரதேசம் ஷில்லாங் பகுதியில் முன்பு பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. 2 நாட்களாகவே மன உளைச்சலுடன் காணப்பட்டதாக கூறப்படும் நிலையில் நள்ளிரவு 12.15  மணி அளவில் பாதுகாப்பு வீரர்கள் தூங்கிக்கொண்டு இருந்த அறையை நோக்கி இன்சா ரக துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளார். இதில் அங்கு தூங்கிக் கொண்டிருந்த இமாச்சல் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த கிரிஜெஷ் குமார் என்பவர் மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தொடர்ந்து மற்றவர்களையும் மிரட்டவே, தகவல் அறிந்து அங்கு வந்த கர்னல் செரியன் துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு சரணடைய உத்தரவிட்டார். அதற்கு நிலாம்பர் சின்கா மறுத்த நிலையில், சுட்டு பிடிக்க நேரிடும் என எச்சரித்ததை தொடர்ந்து அவர் சரணடைந்துள்ளார். நிலாம்பர் சிங்கா சுட்டதில் மொத்தம் உள்ள 20 குண்டுகளில் 7 குண்டுகள் கிரிஜெஷ்  கழுத்து, மூக்கு, முழங்கால் உள்ளிட்ட பகுதிகளில் குண்டு பாய்ந்துள்ளது தெரியவந்துள்ளது.  இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துணை ஆணையர் ஈஸ்வரன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பின்னர்  நிலாம்பர் சின்காவை கைது செய்து  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணி அழுத்தம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்​தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்