நெல்லை மாவட்டத்தில் ரூ. 26,000 மோசடி செய்து தப்பிய மலேசிய நாட்டினர்
நெல்லை மாவட்டம் காவல் கிணறு பஜாரில் உள்ள உரக்கடையில், மேஜிக் மூலம் 26 ஆயிரம் ரூபாய் பதுக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;
காவல்கிணறு பஜாரில் உள்ள உரக்கடை ஒன்றில், பூச்சி மருந்து வாங்க வந்தவர் இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் 13-ஐ லாவகமாக திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிரவைத்துள்ளது. கடைக்கு வந்த இருவர், தாங்கள் மலேசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், பல்வேறு நாட்டின் பண தாள்களை சேகரிப்பதாகவும் கூறியுள்ளனர். தம்மிடம் இருந்த பண தாள்களை காட்டிய ஒருவர், தமிழகம் பிடித்துள்ளதாகவும், இந்திய நாட்டின் பணம் வேண்டும் என்றும் கூறியுள்ளார். அப்போது, பணப் பெட்டிவரை சென்ற அவர், புதிய பணத் தாள் கேட்டு இரண்டாயிரம் ரூபாய் உள்ளிட்ட தாள்களை முன்னும் பின்னும் மாற்றினார். பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து நகர்ந்த நிலையில், இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் 13 குறைந்தது தெரியவந்தது. அங்கிருந்த சிசிடிவியில் பார்த்தபோது, மலேசிய நபர்கள் திருடியது தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் தேடி வருகின்றனர்.