காரில் வந்து மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு : அயனாவரத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் கைது

சென்னையில் கார் ஓட்டுநர் ஒருவர், தனது மகள்களின் கல்லூரி செலவுக்காக வழிப்பறியில் ஈடுபட்டு கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-09-15 08:47 GMT
சென்னை நங்கநல்லுார் 22-வது தெருவை சேர்ந்தவர் மாலதி. 62 வயதான இவர்,  கடந்த 10ஆம் தேதி வீட்டு வாசலில் பூ பறித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது  காரில் வந்த ஒரு நபர், முகவரி கேட்பது போல் அவர்  அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இதே போல  தில்லை கங்கா நகர் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த  72 வயது புஷ்பா என்பவரிடம் இருந்தும் ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை  காரில் வந்தவர் பறித்து சென்றுள்ளார்.  

இந்த வழிப்பறி சம்பவங்கள் குறித்து பழவந்தாங்கல் மற்றும் ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், தில்லை கங்கா நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஆதம்பாக்கம் போலீசார், அவ்வழியே வந்த காரை நிறுத்த முயற்சித்தனர். போலீசாரை கண்டதும் வேகமாக சென்ற அந்த காரை, விரட்டி சென்று பிடித்த போலீசார், கார் ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கார் ஓட்டுநர் சென்னை அயனாவரத்தை சேர்ந்த பாலாஜி என்பது தெரிய வந்தது. கார் ஓட்டுவதன் மூலம் கிடைக்கும் வருமானம் போதாதால், தனது மகள்களின் கல்லூரி செலவுக்காக, வழிப்பறியில் ஈடுபட்டதாக போலீசாரிடம், அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.  இதையடுத்து பாலாஜியை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்