20 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் வைகோ...

20 ஆண்டுகளுக்கு பிறகு வைகோவின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது.

Update: 2019-07-09 09:03 GMT
மதிமுக பொதுச் செயலாளரான வைகோவின் அரசியல் பயணம் என்பது பல்வேறு சாதனைகளையும், பல வரலாற்று நிகழ்வுகளையும் உள்ளடக்கியது. 1964 ல், அண்ணா முன்னிலையில் சென்னை கோகலே மன்றத்தில் இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் பேசி தனது அரசியல் வாழ்வில் அடி எடுத்து வைத்தவர் தான் வைகோ. 1978ல் திமுகவில் இருந்த அவரை முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக அனுப்பி வைத்தார் கருணாநிதி. அப்போது நாடாளுமன்ற அவையில் வைகோவின் குரல் கணீர் என ஓங்கி ஒலித்தது. மக்கள் பிரச்சினைகளை தனக்கே உரிய உடல் மொழியோடு அவர் பேசுவதை அனைத்து கட்சி பிரதிநிதிகளும் ஆர்வமாக பார்த்த காலமும் உண்டு. நாடாளுமன்ற புலி என கொண்டாடப்பட்டவர் வைகோ. அதன்பிறகு 1984 மற்றும் 1990 என அடுத்தடுத்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 3 முறை எம்.பி.யாக இருந்த அவர் மொத்தம் 18 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் தனது முத்திரையை பதித்தார். 
 
1994ல் மதிமுக தொடங்கிய பிறகு நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வைகோ, 1998ல் சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்றார். தொடர்ந்து 1999ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போதும் சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட அவர், மக்களவை உறுப்பினராக 2வது முறையாக தேர்வானார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாடாளுமன்றத்தில் வைகோவின் குரல் கேட்கும் நிலை உருவாகி உள்ளது. இந்த முறை திமுக கூட்டணியில் இடம் பெற்ற மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி என உறுதி செய்யப்பட்டது. வைகோவை மாநிலங்களவைக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்திலேயே ஒரு இடத்தை வழங்கியதாகவும் பேச்சு எழுந்தது. 

முதல் முறையாக கருணாநிதி வைகோவை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்டாலின் வைகோவை அனுப்பி வைக்கிறார். 2009ஆம் ஆண்டு நான் குற்றஞ்சாட்டுகிறேன் என்ற நூல் வெளியீட்டு விழாவில், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் வைகோவுக்கு தண்டனை வழங்கியது. இதனால் வைகோவின் வேட்பு மனு ஏற்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் வைகோவின் வேட்பு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் குரல் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் சூழல் உருவாகி உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்