நீட் தேர்வு - கல்வித்துறை அதிர்ச்சி : அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏமாற்றம்

நீட் தேர்வின் அடிப்படையில், தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2019-06-08 08:29 GMT
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில், இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் 20 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த ஐந்தாம் தேதி வெளியான நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி மற்றும் மதிப்பெண் குறித்து தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இது குறித்து கல்வித்துறை வாட்டாரங்கள் கூறுகையில், 20 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சிக்குரிய மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆனால், நான்கு மாணவர்கள் மட்டும் 400 க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளதால் அவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்
சென்னை போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவி 369 மதிப்பெண்களும் விருதுநகரைச் சேர்ந்த ஒரு மாணவர் 406 மதிப்பெண்கள் என குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே 350க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று உள்ளனர். நீட் மதிப்பெண் அடிப்படையில் கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் நான்கு பேர் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 26 பேர் என 30 பேருக்கு மட்டும் மருத்துவப்படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்கும் என பள்ளிக் கல்வித்துறை கூறி வந்தது. இந்த நிலையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே தகுதியான மதிப்பெண்கள் பெற்று இருப்பது கல்வித்துறை அதிகாரிகளையும் பெற்றோர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்