மண்ணுளி பாம்பு விற்பனை... இருதரப்பினர் மோதல்...!

கரூர் அருகே மண்ணுளி பாம்பு விற்பனை தகராறில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Update: 2019-05-21 08:56 GMT
கேரளாவைச் சேர்ந்த நிதிஷ் என்பவர், குளித்தலை ராஜாவிடம் மண்ணுளி பாம்பு கேட்டு 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், ராஜா மண்ணுளி பாம்பை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். 

இது தொடர்பாக ராஜாவின் நண்பரான தாசில்நாயக்கனூரை சேர்ந்த ரங்கசாமியிடம் நேரடியாக கேட்டபோது, பாம்பை காட்டிய அவர், நிதிஷிடம் பணம் கேட்டுள்ளனர். 

ஏற்கனவே ராஜாவிடம் கொடுத்துவிட்டதாக நிதிஷ் கூறிய நிலையில், இருதரப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. 

நிதீஷுடன் வந்திருந்த அவரின் நண்பர் முகமது ரபியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே, பணம் பெற்ற நிலையில், மீண்டும் பணம் கேட்டதால், ஆத்திரமடைந்த முகமது ரபி, ராஜாவின் கூட்டாளி தங்கவேலுவை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், இடது தோள்பட்டையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், துப்பாக்கிச் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். 

அங்கிருந்து ஓட்டம் பிடித்த நிதிஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள் முகமது ரபி, விவேக், நிதின், சுபாஷ் ஆகியோர் சோளக்காட்டில் பதுங்கி இருந்தனர்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார்,  4 பேரை கைது செய்தனர். தப்பியோடிய சுபாஷ் என்பவனை தேடி வருகின்றனர்.

சதுரங்க வேட்டை போன்ற படங்களில் மண்ணுளி பாம்பு, ரைஸ் புல்லிங் போன்றவற்றில் பெரும் மோசடி நடப்பதாக காண்பிக்கப்பட்ட நிலையிலும், அது பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படவே இல்லை என போலீசார் கூறுகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்