அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு குறித்த விவரங்களை நாளை மறுநாள் தாக்கல் செய்ய வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு குறித்த விவரங்களை நாளை மறுநாள் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-05-15 17:42 GMT
தமிழகத்தில் கடந்த மாதம் 18 ந்தேதி நடைபெற்ற  நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் 6 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  ஈடுபட்டனர். அவர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க விண்ணப்ப படிவம் 12, 12ஏ முறையாக வழங்கப்படவில்லை என்றும், 1 லட்சம் அரசு ஊழியர்கள் வாக்களிக்கவில்லை என்றும் ஆங்கில  நாளேடு  ஒன்றில் செய்தி வெளியானது. இதை சுட்டிக்காட்டி தேர்தல் பணிகளில் ஈடுபட்டு  தபால் வாக்களிக்க தவறிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வழங்க வேண்டும் என்றும், அந்த  வாக்குகளை வாக்கு எண்ணிக்கையில் சேர்க்க கோரியும்  சாந்தகுமார் என்ற அரசு ஆசிரியர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசுக்கு எதிராக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வாக்களிப்பார்கள் என்ற எண்ணத்தில் இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மனுதாரர் தரப்பில்  குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  எத்தனை  தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன, எத்தனை தபால் ஓட்டுகள் பதிவானது உள்ளிட்ட விவரங்களை நாளை மறுநாள் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்