மியூசிக்கலி ஆப்பில் பெண் போல நடித்த இளைஞர் தற்கொலை

சமூக வலை தளங்களில், அநாகரீகமாக விமர்சித்ததால், சென்னை இளைஞர் கலையரசன் ரயில் முன் பாய்ந்து உயிரை விட்டார்.

Update: 2018-10-19 07:31 GMT
* சென்னையைச் சேர்ந்தவர் கலையரசன்... டிக்டொக் (Tiktok) செயலியைப் பயன்படுத்துவோருக்கு இவரை நன்றாகத் தெரியும்.தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கலையரசன், டிக்டொக் செயலியில் பெண்களைப் போன்று நடித்து வீடியோ வெளியிடுவதை ஆர்வமாக செய்துள்ளார். அந்த பதிவுகளில் இவரது முக பாவனை பெண்மையை வெளிப்படுத்துவதாக இருந்தது. 

* இவரது வீடியோக்களுக்கு லைக்ள் ஒரு பக்கம் குவிந்தாலும், அநாகரீகமான சொற்களால் சிலர் விமர்சனத்தையும் வைத்தனர். அப்போது, கலையரசன் வெளியிட்ட வீடியோவில் தமது மனக்குமுறலை வெளியிட்டிருந்தார். அப்போது, தகாத வார்த்தைகள் வேண்டாம் என, வேண்டுகோள் விடுத்திருந்தார். 

* இது தொடர்பாகக் கலையரசன் வெளியிட்டிருந்த வீடியோவில், ``என்னை டிக்டொக்கில் பின் தொடருபவர்களை ஃபேன்ஸ் என்று கூறமாட்டேன். நீங்களும் எனக்கு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் போன்றவர்தான். என்னைத் திட்டுபவர்களை நீங்கள் பதிலுக்குத் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் திட்டாதீர்கள். நீங்கள் திட்டுவது அவர்களைக் கூறுவதுபோல் இல்லை என்னையும் திட்டுவதுபோல்தான் உள்ளது. அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது. அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் தகாத வார்த்தைகள் வேண்டாம் என்று சொல்லுங்கள். நண்பர்கள் சிலர் பையன் மாதிரி பண்ணுன்னு சொல்றாங்க உங்களுக்காகப் பண்ணுறேன்"எனப் பதிவிட்டிருந்தார்.

* இதன் பின்னர், தொடர்ந்து நிறைய வீடியோக்கள் வெளியிட்டார். அப்போதும் அநாகரீக வார்த்தைகள் குறையவில்லை. அதிகரிக்கத்தான் செய்திருந்தது. இதனால் கோபமடைந்தவர், நீங்கள் அசிங்கமாகப் பேசுவது என்னை வேதனைப்படுத்துகிறது. உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் ப்ளாக் செய்து விட்டுப்போங்கள்" என ஒரு வீடியோ பதிவில் பேசியிருந்தார்.

 * இந்த நிலையில், 'நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த மரணம் நினைக்கின்றதா!' என்ற பாடல் மற்றும் கலையரசனின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் வலம் வந்தன. கலையரசனை பின் தொடர்ந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கலையரசனின் மரணம் இயற்கையாக நிகழவில்லை. விமர்சனக் கணைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனக் கலையரசனின் முகநூல் நண்பர்கள் வருத்தத்துடன் பதிவிட்டனர்.

* சென்னை, வியாசர்பாடி ரயில்வே தண்டவாளம் அருகே கிடந்த கலையரசனின் உடலை மீட்ட காவல்துறையினர், சமீபத்தில் அவரது தந்தை உயிரிழந்ததால் விரக்தியடைந்த நிலையில் அவர் இருந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.

* 'நெருக்கமானவர்களின் இறப்பு மட்டுமல்ல, இப்படிப்பட்டவர்களின் இறப்பும் வலிதான்' என, அவரை பின்தொடர்பவர்கள் பதிவிட்டு வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்