8 வழி சாலை திட்டம் : தடை விதிக்க நேரிடும் - சென்னை உயர் நீதிமன்றம்

8 வழி சாலை திட்டத்துக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்க நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2018-09-11 18:44 GMT
சேலம், சென்னை இடையிலான 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில்,  விசாரணைக்கு வந்தது. 

அப்போது, திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு, தமிழக அரசு வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்தார். 

இதையடுத்து, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பாளையத்தில் தனியார் நிலத்தை உட்பிரிவு செய்து அனுப்பிய கடிதத்தை நீதிபதிகள் மேற்கோள் காட்டியதோடு,

நிலத்தின் உரிமையாளர்களை அப்புறப்படுத்தக் கூடாது என ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில், நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கடிதம் அனுப்பியது முறையற்றது என தெரிவித்தனர். 

இதற்காகவே, ஒட்டு மொத்த திட்டத்திற்கும் தடை விதிக்கப் போவதாகவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். 

மேலும், பசுமை வழி சாலை திட்டத்தில் தேவையற்ற அவசரத்தை மாநில அரசு காட்டுவதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, அந்த கடிதம் தொடர்பான ஆவணங்ளை புதன்கிழமையே தாக்கல் செய்வதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

உடனே, 109 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், காய்ந்து போன ஒரே ஒரு மரத்தை வெட்டவே அனுமதி பெற்றதாகவும் மற்ற மரத்தை வெட்டியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார். 

இதையடுத்து, மத்திய அரசு தரப்பு வழக்கறிஞரிடம் சுற்றுச் சூழல் ஆய்வு எந்த நிலையில் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு, இது சம்பந்தமாக வெள்ளிக்கிழமையன்று அறிக்கை அளிப்பதாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்ததை தொடர்ந்து, வெள்ளிக்கிழமைக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்