தாய், தந்தையை இழந்து தவித்த 15 வயது சிறுவனுக்கு அடைக்கலம் கொடுத்த காவலர்

தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலையில் இருந்த 15 வயது சிறுவனுக்கு அயனாவரம் காவல் உதவி ஆணையர் பாலமுருகன் அடைக்கலம் கொடுத்துள்ளார்.

Update: 2018-09-04 12:54 GMT
சென்னை தலைமைச் செயலக காலனி அருகே உள்ள நம்மாழ்வாழ்வார் பேட்டையைச் சேர்ந்த பரிமளா தன் கணவர் கோவிந்தராஜன் உயிரிழந்த நிலையில் தன் மகனுடன் வசித்து வந்தார். பரிமளாவின் மகன் கார்த்திக் மயிலாப்பூரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சூர்யா என்ற இளைஞரால் பரிமளா கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக நடந்த  கொலையால் தனக்கு ஆதரவாக இருந்த தாயையும் இழந்து சிறுவன் தவித்து வந்தான். 

இந்த வழக்கை அயனாவரம் உதவி ஆணையர் பாலமுருகன் விசாரித்து வந்தார். தாய், தந்தை இழந்த சிறுவன் கார்த்திக் மயிலாப்பூர் விடுதியில் இருப்பது குறித்து தகவலறிந்த அவர் அங்கு நேரில் சென்று சிறுவனை சந்தித்தார். மேலும் சிறுவனின் பாதுகாவலராக இனி தான் இருக்கப் போவதாக விடுதி நிர்வாகத்திடம் கூறிய பாலமுருகன், சிறுவனுக்கு  தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார். 

பாலமுருகனுக்கு ஏற்கனவே ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் கார்த்திக்கையும் 3 வது பிள்ளையாக பாவித்து பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளார். மேலும் கார்த்திக்கின் உறவினர்கள் யாரும் வராத பட்சத்தில் அவனை தானே சட்டப்படி தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளதாகவும் பாலமுருகன் தெரிவித்துள்ளார். காவல் உதவி ஆணையர் பாலமுருகனின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்