உலக கோப்பை போட்டிகளை காண அதீத ஆர்வம் - சுமார் 4,200 கி.மீ., சைக்கிளில் பயணம்

கேரளாவைச் சேர்ந்த கால்பந்து காதலர் - உலக கோப்பை போட்டிகளை காண 4,200 கி.மீ., சைக்கிளில் பயணம்

Update: 2018-06-25 03:58 GMT
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர், க்ளிஃபின் ஃப்ரான்சிஸ் (CLIFIN FRANCIS)... உலக கோப்பை - கால்பந்து போட்டிகளைக் காண மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், இவரிடம் அந்தளவுக்கு பணமில்லை... அதனால் என்ன...? சைக்கிளில் கிளம்பிவிட்டார்... 

கடந்த பிப்ரவரி 23ஆம் தேதியன்று, தமது பயணத்தை தொடங்கிய க்ளிஃபின், விமானம் மூலம் துபாய் சென்று, அங்கிருந்து படகு வழியாக இரான் சென்றார். இரானில் இருந்து மாஸ்கோவுக்கு, சுமார் 4 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிளை மிதித்துள்ளார். 

மார்ச் 11ஆம் தேதி, இரான் நாட்டிற்கு சென்றடைந்தார். 45 நாட்கள் இரானில் இருந்த போதும், 2 நாட்கள் தான் விடுதியில் தங்க முடிந்தது. காரணம், பொருளாதார நிலை... ஆனால், இவரது சைக்கிள் பயணத்தைக் கேள்விப்பட்ட இரானிய மக்கள், தங்குவதற்கு இடம் கொடுத்து, உணவளித்தது, நெகிழ்வான சம்பவமாகும்... 

இரானுக்கு அடுத்து அவர் சென்றது அசெர்பைஜான். கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவிற்கு இடையில் உள்ள நாடு இதுவாகும்... ஜார்ஜியா நாட்டை சென்றடைந்த க்ளிஃபினுக்கு அங்கு, அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர், மாற்றுப் பாதையை தேடியுள்ளார். 

மீண்டும் வேறொரு வழியை கண்டுபிடித்து ரஷ்யாவின் டஜெஸ்தான் எல்லையை அவர் அடைந்தார்.
மொழி ஒரு பெரும் பிரச்சினையாக இருந்த நிலையில், ஒரு இந்தியர் சைக்கிளில் வருவதை, உலக மக்கள்,  ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

டாம்பாவ் வரை சென்ற க்ளிஃபின், அங்கிருந்து 460 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாஸ்கோவிற்கு, ஜூன் 26ஆம் தேதிக்குள் செல்ல வேண்டும்.

தமது இந்த பயணம், கால்பந்து மற்றும் உடல்நலம் ஆகிய இரண்டையும் மக்களிடத்தில் ஊக்குவிக்கும் என்று க்ளிஃபின் ஃப்ராண்சிஸ் நம்புகிறார்.

தம்மைப் பார்த்தாவது, சைக்கிள் ஓட்டவும், கால்பந்து விளையாடவும் பலரும் விரும்புவார்கள் என்றும் அவர் எண்ணுகிறார்... 

இவருக்கு மிகவும் பிடித்தவர் லியோனல் மெஸ்ஸி. அவரை பார்த்து, தமது சைக்கிளில் கையெழுத்து வாங்க வேண்டும் என்பது தான், க்ளிஃபின் கனவாகும்... 

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், ஒரு நாள் இந்தியா விளையாடுவதை தாம் பார்க்கவேண்டும் என்றும், இந்த கால்பந்து காதலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்... 



Tags:    

மேலும் செய்திகள்