காந்தியை மேற்கோள்காட்டி தொண்டு நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு

ஏழை எளிய மக்களுக்கு உணவு, மருத்துவ வசதி கிடைப்பதை தொண்டு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-03-30 20:00 GMT
நாட்டிலுள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக உரையாற்றினார்.

அர்ப்பணிப்பு உணர்வுடனும் உறுதியுடனும் பணியாற்றி வரும் சமூக நல அமைப்புகளுக்கு பிரதமர் மோடி தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

ஏழை, எளிய மக்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சேவை செய்வதே நாட்டுக்கு சேவையாற்றுவதற்கான சிறந்த வழி என்று மகாத்மா காந்தி கூறியுள்ளதை அப்போது பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.  

மேலும்,  நாடு தற்போது சந்தித்து வரும் சிக்கலான சூழ்நிலையில் முன்பு எப்போதையும் விட சமூக நல அமைப்புகளின் சேவையும், வளங்களும் தற்போது அதிகம்  தேவைப்படுகின்றன என்றும் அவர் கூறினார். 

ஏழை-எளிய மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதை தொண்டு நிறுவனங்கள் உறுதி செய்து மிகப்பெரிய பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும்,  

தங்களிடம் இருக்கும் மருத்துவ வசதிகள் மற்றும் தன்னார்வலர்களை நோயாளிகள் மற்றும் உதவி தேவைப்படுபவர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.

சமூக விலகல் விதிமுறைகளை மீறி மக்கள் பல இடங்களில் கூடுவதாகவும், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும் எனவும் பிரதமர்  யோசனை தெரிவித்தார். 

ஏழை எளிய மற்றும் பின்தங்கிய மக்களுக்கு தொடர்ந்து உதவி கிடைத்திட சமூக நல அமைப்புகள் பணியாற்றிட வேண்டும் எனவும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்