"வேளாண்துறை வளர்ச்சிக்காக 16 அம்ச திட்டம்" - ஆத்திசூடி வரியை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர்

"பூமி திருத்தி உண்" என்ற ஆத்திச்சூடி வரியை சுட்டிக்காட்டி விவசாயத்தின் பெருமையை விளக்கிய நிர்மலா சீதாராமன், வேளாண் துறையின் வளர்சிக்காக 16 அம்ச திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.;

Update: 2020-02-01 10:58 GMT
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே மத்திய அரசின் இலக்கு என தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வேளாண் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த 16 அம்ச திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். 

தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும் என்றும், மாவட்ட வாரியாக தோட்டக்கலை பொருள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் கூறினார்.

20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய மின்சக்தி பம்புகள் அமைக்க உதவி செய்யப்படும் எனவும், விவசாய சந்தைகள் மேலும் 
எளிமையாக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

6 கோடியே11 லட்சம் விவசாயிகள் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ளதாகவும் உரங்கள் பயன்பாட்டில் சமநிலையை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறினார்.

எளிதில் அழுகும் பொருட்களை கொண்டு செல்ல 
ஏதுவாக குளிர்சாதன வசதி செய்யப்பட்ட கிசான் ரயில் ஏற்படுத்தப்படும் என்றும் விவசாய விளைபொருட்கள் போக்குவரத்துக்கான செலவினங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வேளாண் உற்பத்தி பொருட்கள் சேமிப்பு கிடங்குகளுக்கு  புவிசார் குறியீடும், அவற்றை வரைபடம் வாயிலாக கண்டறியும் வசதியும் ஏற்படுத்தப்படும்  என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

விதைகளை சேமித்து விநியோகிக்க தானியலட்சுமி என்ற திட்டத்தில் கிராம பெண்கள் ஈடுபடுத்தப்படுவர் என்றும்
விவசாயிகளுக்கு கடன் வழங்க 15 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

வேளாண் மற்றும் சொட்டு நீர் பாசனங்களுக்கு 2 லட்சத்து 83 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், 
விவசாய விளைபொருட்களை சர்வதேச அளவில் கொண்டு செல்ல விமான போக்குவரத்து அமைச்சகத்தின் சார்பாக க்ரிஷி உதான் என்கிற திட்டம் துவங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

2022ம் ஆண்டுக்குள் மீன் உற்பத்தியை 200 லட்சம் டன்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும்
2025 ஆம் ஆண்டுக்குள் பால் உற்பத்தியை 10 கோடியே 80 லட்சம் டன்னாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்