"கட்டுப்படுத்தப்படாத எரிபொருள் விலை வீழ்ச்சிக்கே வித்திடும்" - ராமதாஸ்

கட்டுப்படுத்தப்படாத எரிபொருள் விலை வீழ்ச்சிக்கே வித்திடும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-30 10:30 GMT
கட்டுப்படுத்தப்படாத எரிபொருள் விலை வீழ்ச்சிக்கே வித்திடும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவு புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளதாகவும், இது வளர்ச்சிக்கான அறிகுறி அல்ல என்று ராமதாஸ் கூறியுள்ளார். கடந்த ஒருமாதத்தில் பெட்ரோல் விலை 2 ரூபாய் 15 காசுகளும், டீசல் விலை 2 ரூபாய் 33 காசுகளும் அதிகரித்துள்ளதாகவும், கடந்த காலங்களில் இந்த அளவுக்கு விலை உயர்த்தப்பட்டதில்லை என்றும் சுட்டிக்காட்டி உள்ளார். ஒட்டுமொத்த வரி வருவாயில் பெரும் பகுதியை எரிபொருள் விற்பனை வரி மூலம் மத்திய, மாநில அரசுகள் திரட்டத் துடிப்பது தான், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது தாங்க முடியாத சுமையை சுமத்தியுள்ளது என்றும், இது குறித்து அரசுகள் கவலைப்படவில்லை என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

எரிபொருட்கள் மீதான வரி மூலம் மட்டும் ஆண்டுக்கு 3 புள்ளி 5 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருமானம் கிடைப்பதாகவும், இது பெரு நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும் மறைமுக வரி மூலம் கிடைக்கும் வருவாயை விட அதிகம் என்றும் ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார். ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை மூலம் தமிழக அரசுக்கு 27 ரூபாய் 84 பைசாவும், டீசல் விற்பனை மூலம் லிட்டருக்கு 18 ரூபாய் 50 பைசாவும் வருமானம் கிடைப்பதாக சுட்டிக்காட்டி உள்ளார். வரி வருவாய் என்ற குறுகியப் பார்வையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதை தவிர்த்து பொருளாதார வளர்ச்சி சார்ந்த தொலைநோக்குப் பார்வையுடன் அணுக வேண்டும் என்றும், உடனடியாக வரிகளைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலைகள் குறைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்