இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை நிறுத்தும் பாகிஸ்தான்.... பாதிப்பு யாருக்கு?

இந்தியாவில் இருந்து நேரடி இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள பாகிஸ்தான், இந்திய பொருட்களை அரபு நாடுகள் வழியாக இறக்குமதி செய்து கொள்கிறது.

Update: 2019-08-08 11:50 GMT
இந்தியாவில் இருந்து நேரடி இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள பாகிஸ்தான், இந்திய பொருட்களை அரபு நாடுகள் வழியாக இறக்குமதி செய்து கொள்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பாகிஸ்தானுக்கான ஏற்றுமதி 3 புள்ளி 2 சதவீதமாகவும், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் என்கிற அளவில்தான் உள்ளது. சிமெண்ட், உரங்கள், பழங்கள், ரசாயனப் பொருட்கள், தோல் பொருட்களை பாகிஸ்தானில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பஞ்சு, பருத்தி நூல், கைத்தறி நூல், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய ஆயிரத்து 209 பொருட்களுக்கு பாகிஸ்தான் நீண்ட காலமாகவே தடை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கான ஏற்றுமதி வர்த்தகம் 75 சதவீதம் கடல் வழியாகவும், சாலை வழியாகவும் 9 சதவீத வர்த்தகமும் நடைபெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து வாகா வழியாக 138 வகையான பொருட்களை மட்டுமே பாகிஸ்தான் அனுமதிக்கிறது. வாகனங்களை வாகா எல்லையில் நிறுத்தி, வேறு வாகனங்களில் பொருட்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதால் இந்த வழியான வர்த்தகத்தினை இந்தியா குறைத்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து 51 சதவீத பொருட்கள் எல்லைப்பகுதி சாலை வழியாக இந்தியாவுக்கு வருகின்றன. கடல் மார்க்கமாக 43 சதவீத வர்த்தகத்தினை பாகிஸ்தான் செய்து வருகிறது. வாகா எல்லை வழியான சரக்கு போக்குவரத்தில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள், கள்ள நோட்டுகள் கடத்தப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் வாகா வழியான வர்த்தகத்தை இந்தியா தடை செய்தது. தீவிரவாத தாக்குதல்களால் இந்தியா - பாகிஸ்தான் வர்த்தக உறவு சீராக இல்லை.

இரு நாடுகளுக்கு இடையில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தக வாய்ப்பு இருக்கிறது என்று உலக வங்கி கணித்துள்ளது. 2014-15 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கான ஏற்றுமதி வர்த்தகத்தை பாகிஸ்தான் படிப்படியாக குறைத்து வந்துள்ளது. இந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அதிகாரத்தை நீக்கியது, இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாக இருக்க, அதைக் காரணமாக வைத்து வர்த்தக உறவை பாகிஸ்தான் துண்டித்துக் கொண்டாலும், இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றே சொல்லப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்