எப்படி சிபில் ஸ்கோரை உயர்த்துவது..?

சிபில் ஸ்கோரை சரியாகப் பராமரிக்க என்ன செய்ய வேண்டும்...?

Update: 2019-02-21 11:03 GMT
வீடு, கார்  என அனைத்துக்கும் கடன் வாங்கும் காலத்தில் இருக்கிறோம். உங்களுக்கான கடனே சிபில் ஸ்கோரின் அடிப்படையில் தான்  கிடைக்கும் என்பது தான் யதார்த்தம். சிபில் ஸ்கோரை சரியாகப் பராமரிக்க என்ன செய்ய வேண்டும்...? 

கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?

வங்கிகளில் கடன் வாங்கியவர்கள், அவற்றை திரும்ப செலுத்தினால் அதற்கு அளிக்கப்படும் புள்ளிகள்தான் சிபில் ஸ்கோர்.  எந்த கடன் வாங்கியிருந்தாலும், அதற்கான  தொகையை சரியான நேரத்தில் திரும்பச் செலுத்தினால் சிபில் ஸ்கோர் அதிகரிக்கும்.  ஒரு இஎம்ஐ தவறினாலும் அதனுடைய பாதிப்பு சிபில் ஸ்கோரில் பிரதிபலிக்கும்.  சிபில் ஸ்கோர் குறைந்தால் புதிய கடன் வாங்க முடியாது.

ஸ்கோர் எவ்வளவு இருக்க வேண்டும் ? 

கடன்  வாங்கியவர் அதை திரும்ப செலுத்திய அடிப்படையில்,  மிக மோசம், மோசம், ஆவரேஜ், சிறப்பு, மிகச் சிறப்பு என மதிப்பிடப்படுகிறது. இதற்கு  300 முதல் 900 புள்ளிகள் அளிக்கப்படுகின்றன. இதில் அதிக மதிப்பீடும், புள்ளிகளும் பெற்றவர்கள், குறைவான  ரிஸ்க் உள்ளவர்கள் என்றும், குறைந்த புள்ளிகளும், மதிப்பும் வைத்துள்ளவர்கள் அதிக ரிஸ்க்  உடையவர்கள் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

எப்படி மதிப்பிடப்படுகிறது ?

கடனை திரும்பச் செலுத்தும் முறைக்கு 30 சதவீதமும், எந்த வகையான கடன், கடனின் கால அளவு ஆகியவைக்கு 25 சதவீதமும், சம்பளத்துக்கும், கடன் தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசத்துக்கு 25 சதவீதமும், கடன் வாங்க முயற்சி செய்யும் முறை, கிரெடிட் கார்டு லிமிட்டில் எத்தனை சதவீத தொகையை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்துகிறீர்கள் என்பதற்கு 20 சதவீத மதிப்பு அளிக்கப்பட்டு மதிப்பிடப்படும்.

எப்படி கிரெடிட் ஸ்கோரை உயர்த்துவது ?

கடன் தொகையின் அளவு சம்பளத்தில் அதிகபட்சம் 60 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என்பதும்,  கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது, அதிக தொகையை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்திவிட்டு,  பில் தொகை வந்ததும்   குறைந்தபட்ச  தொகையை செலுத்தக் கூடாது என்பதும் முக்கியம். ஒரு வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்து அங்குக் கிடைக்க வில்லை என்றால் உடனே அடுத்த வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பம் செய்யக் கூடாது.   அதேபோல, ஒரே நேரத்தில் பல வங்கிகளில் கடனுக்காக விண்ணப்பம் செய்வதும் தவறு.  

கடனை முடித்தபிறகு, 

கடனை கட்டி முடித்த 3 - 6 மாதங்கள் கழித்து சிபில் ரிப்போர்ட்டுக்கு விண்ணப்பித்து சிபில் ஸ்கோர் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். சிபில் ரிப்போர்ட்டில் உள்ள எந்தத் தகவலையும் தனிநபரால் மாற்ற முடியாது என்றாலும், வங்கியின் கவனக்குறைவு அல்லது வேறு காரணங்களினால் சிபில் ரிப்போர்ட்டில் தகவல்கள் தவறாக இருந்தால் உடனே சரிசெய்ய வேண்டும்

சிபில் ஸ்கோர் எல்லோருக்கும் இருக்குமா?

இதுவரை கடன் வாங்காதவர்களுக்கு சிபில் ஸ்கோர் இருக்காது.  அவர்கள் கடன் கேட்டு விண்ணப்பம் செய்தால், சிபில் அறிக்கையில் NA அல்லது NH எனக் குறிப்பிடப்படும்.


சிபில் ஸ்கோர் எப்படி பார்ப்பது...?

இதை தனியார் அமைப்பு செயல்படுத்துகிறது என்றாலும்,  ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம். ஒரு மாதம் வரை பயன்படுத்த ரூ. 550 கட்டணம் வசூலிக்கப்ப்டுறது. 6 மாதம், 1 ஆண்டு என அடிக்கடி பயன்படுத்தவும் கட்டண முறைகள் உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்