2013ம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்த சாரதா சிட் பண்ட்ஸ் நிதி நிறுவன மோசடி...

மத்திய அரசுக்கும், மேற்கு வங்க திரினாமுல் காங்கிரஸ் அரசுக்கும் மோதலை ஏற்படுத்த காரணமாக இருக்கும் சாரதா சிட் பண்ட்ஸ் நிதி நிறுவன மோசடி கடந்த 2013ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது.;

Update: 2019-02-04 19:57 GMT
மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கொத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட சாரதா நிதிநிறுவன குழுமத்தை  துவக்கியவர்  சுதிப்த்தோ சென், ஆரம்ப காலங்களில் நக்சல்  இயக்கத்தில் செயல்பட்ட அவர். பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து, பெரும் தொழிலதிபராக மாறினார். கடந்த  2006 ஆண்டு  துவங்கப்ட்ட சாரதா நிதி நிறுவனம், படிப்படியாக  வளர்ந்து சுமார் 200 இணை நிறுவனங்கள், 17 லட்சம் டெப்பாசிட்தாரர்கள், 16,000 ஊழியர்கள் மற்றும் முகவர்களை கொண்ட பெரும் நிதி நிறுவனமாக வளர்ந்தது. அதிக வட்டி, லாபம் தருவதாக, கவர்சிகரமான விளம்பரங்கள் மூலம் பொது மக்களிடம் இருந்து சுமார் 20,000 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டியது. மத்திய அரசின் கண்காணிப்பு அமைப்பான செபி,  இது சட்ட விரோதமான நிதி திரட்டல் என்று கூறி கடந்த  2009 ஆம் ஆண்டு அதனை தடுக்க முயன்றது. அதனால் கடன் பத்திரங்கள், டெப்பாசிட்டுள் மூலம் நிதி திரட்டும் முறைக்கு பதிலாக, சாரதா சிட்பண்ட்ஸ் ஏலச்சீட்டு முறைக்கு  மாற்றிக் கொண்டது. சாரதா குழுமம். சுற்றுலா சேவைகள், ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறை, மோட்டார் சைக்கிள் உற்பத்தி போன்ற துறைகளில் முதலீடு செய்ய புதிய திட்டங்களை அறிவித்து, நிதி திரட்டியது. இவை அனைத்தும் மாநில அரசின் கண்காணிப்பில் வரும் துறைகள் என்பதால் செபியினால் சாரதா குழுமத்தை எதுவும் செய்ய முடியவில்லை. கடந்த 2011ஆம் ஆண்டு  மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசில், பல முக்கிய தலைவர்களுடன் சாரதா நிறுவன தலைவர் சுதிப்த்தோ சென் சுமூகமாக உறவு கொண்டிருந்தார்.  கடந்த 2013  ஆண்டு ஏப்ரல் மாதம்  சாரதா நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டு  சுதிப்த்தோ சென் மற்றும் இதர இயக்குனர்கள்  மேற்கு வங்கத்தை விட்டு தப்பி சென்று தலைமறைவாக இருந்தனர். பின்னர் அவர்கள் காஷ்மீரில் கைது செய்யப்பட்டனர். திரிணாமுல் காங்கிராஸ் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் குணல் கோஷ், ஸ்ரிஞ்ஜோய் போஸ், முன்னாள் டி.ஜி.பி ரஜத் மஜூம்தார், மம்தா அமைச்சரவையில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த மதன் மித்ரா ஆகியோர் மீதும் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர். சாரதா குழுமத்தினால் பாதிக்கபட்ட பொதுமக்களின் நிவாரணத்திற்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது மேற்கு வங்க அரசு. பல் வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சி.பி.ஐ விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் சி.பி.ஐ, மாநில காவலத் துறை இடையே மோதல் வெடித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்