பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் வேலைநிறுத்தம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகளின் வேலைநிறுத்தம் நடைபெற்றுவரும் நிலையில் அக்கட்சிகளை சேர்ந்தவர்கள், பல்வேறு இடங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-10 03:13 GMT
* பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும்  மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

* இதற்கு, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. 

* இதனால் பெரும்பாலான இடங்களில் ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. 

ரயில்களை மறித்து போராட்டம்

* ஒடிசா மாநிலம் சம்பல்பூர், புவனேஸ்வரில் ரயில்களை மறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். முழு அடைப்பு போராட்டம் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 


* தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள முஷிராபாத் பகுதியில் உள்ள அரசு பேருந்து பணிமனை முன்பு, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பேரணியாக சென்று பேருந்துகளை மறித்த அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

* கர்நாடக மாநிலம் ஹூபாலி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 
காங்கிரஸ் கட்சியினர், சாலையில் டயர்களை எரித்து, எதிர்ப்பை காட்டினர். இதேபோல், கல்புராகி பகுதியில் பேருந்துகள் இயக்கப்படாததால், பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

* ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்த அவர்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.  இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

* உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அவர்கள், முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்