இந்து மதப் புரட்சியாளர் ராமானுஜருக்கு பிரம்மாண்ட சிலை
உலகிலேயே, இரண்டாவதாக, மிக உயரமான ராமானுஜர் சிலை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.;
வைஷ்ண குருவான ராமானுஜரின், 1000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தெலங்கானா மாநிலத்திலுள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில், 216 அடியில் ஐம்பொன் திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
"கடவுளை அன்புடன் வணங்க வேண்டும்; பயத்துடன் வழிபடுவது சரியானதல்ல" என்பதை உலகறியச் செய்தவர் ராமானுஜர்.
அவரது 1,000-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையிலும், ராமானுஜரின் சிறப்புகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டுசேர்க்கும் வகையிலும், அவரது பெயரைப் பறைசாற்றும் வகையிலும், பிரமாண்ட வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்திலிருந்து, 9 கிலோமீட்டர் தொலைவில், ஸ்ரீராம்நகரில் ராமானுஜருக்கு 216 அடி உயரமுள்ள சிலை அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2015-ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்டன.
ராமானுஜரின் சிலையைச் சுற்றி, வட்ட வடிவத்தில் 108 திவ்ய ஸ்தலங்களும், ராமானுஜரின் வரலாற்றை விவரிக்கும் வகையில், இயந்திர மனித கண்காட்சியும் அமைக்கப்படுகிறது.
ராமானுஜரின் உருவச்சிலை சுழலும் வகையில் ஸ்தூபி நிறுவப்படவுள்ளது. அதே பகுதியில் ராமானுஜரின் சிந்தாந்தங்களைப் பரப்பும் வகையில் ஓர் ஆராய்ச்சி மையம், புத்தக வெளியீட்டு மையமும் அமையவுள்ளன.
சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த வளாகத்தை மூன்று கட்டங்களாக திறக்க திட்டமிட்டுள்ளனர். இந்தப் பணிகள் அனைத்தையும் ஆயிரம் கோடி ரூபாயில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விஜயவாடாவைச் சேர்ந்த ஸ்ரீ திரிதண்டி சின்ன ஸ்ரீமந்நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகளின் அறக்கட்டளை, இந்த பணிகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கு பக்தர்கள், நிதியுதவி, பொருளுதவி அளித்து வருகின்றனர்.
தாய்லாந்தில் 302 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு அடுத்தபடியாக, மிக உயரமான சிலையாக, ராமானுஜர் சிலை கருதப்படுகிறது.