சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் அரசு திட்டங்களை சிலர் அவதூறு செய்கின்றனர் - அமைச்சர் வேலுமணி வேதனை

தமிழக அரசு எந்த புதிய திட்டங்கள் கொண்டு வந்தாலும் அது குறித்து சில சமூக விரோதிகள் தவறான தகவலை பரப்பி வருவதாக அமைச்சர் வேதனை தெரிவித்தார்.

Update: 2018-06-28 11:08 GMT
சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் அரசு திட்டங்களை சிலர் அவதூறு செய்வதாக அமைச்சர் வேலுமணி வேதனை தெரிவித்தார். 

திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் சட்டப்பேரவையில் பேசும்போது,  கோவையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கு திமுக ஆட்சி காலத்தில் திட்டம் போடப்பட்டது என்றார். ஆனால் அந்த திட்டத்தை செயல்படுத்தாமல், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ்  நிறுவனத்திற்கு 28 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடுவது ஏன்?  என்று  கேள்வி  எழுப்பினார். 

உள்ளாட்சி  மன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில் இந்த திட்டம் கொண்டு வரப்படுவதற்கான அவசியம் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதில் அளித்து பேசிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இதுதொடர்பாக அரசின் ஒப்புதல் பெறப்பட்டதுடன், அதன்பின் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, சூயஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதாக கூறினார்... 

தொடர்ந்து பேசிய அமைச்சர், சூயஸ் நிறுவனம், 21 ஆண்டுகளுக்கு குடிநீர் வழங்கும் பணியை மேற்கொள்ளும் எனவும், இதற்காக 2 ஆயிரத்து 961 கோடி ரூபாய் செலவிப்படுவதாகவும், அனைத்து வீடுகளுக்கும் தானியங்கி மீட்டர் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்கும் வகையில், புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருப்பதாகவும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே மாநகராட்சி வசூலிக்கும் என்றும் அவர் கூறினார் 

தமிழக அரசு எந்த புதிய திட்டங்கள் கொண்டு வந்தாலும் அது குறித்து சில சமூக விரோதிகள் தவறான தகவலை பரப்பி வருவதாக அமைச்சர் வேதனை தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்