ப.சிதம்பரம் உறவினர் கடத்திக் கொலை - 4 நபர்கள் கைது

கொலை செய்து விட்டு, காரிலேயே பிரேதத்தை வைத்துக் கொண்டு சுற்றி வந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-06-28 05:52 GMT
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி சாலையில் உள்ள கருமாரம்பாளையம் பாளையக்காட்டைச் சேர்ந்தவர், 47 வயதான சிவமூர்த்தி. இவர், முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினியின் சகோதரி பத்மினியின் மருமகன் ஆவார்.திருப்பூரில், பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்த இவர், கோவை செல்வதாக காரில் கிளம்பினார்... ஆனால், வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக, திருப்பூர் வடக்கு காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். சிவமூர்த்தி தமது காரில் ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தி இருந்தார். அதனை வைத்து. காவல்துறையினர் தேடத் தொடங்கினர். அப்போது, சிவமூர்த்தியின் கார், ஆம்பூர் அருகே உள்ள வெங்கிளி பகுதியில் சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது.

உடனே திருப்பூர் காவல்துறையினர், வேலூர் காவல்துறையினரைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். ஆம்பூர் அருகே வெங்கிளி என்ற இடத்தில் சிவமூர்த்தியின் காரை, அந்த காவலர்கள் மடக்கி பிடித்தனர்.வேலூர் தாலுகா காவல் நிலையத்திற்கு, மூவரையும் அழைத்து சென்று அதிரடி விசாரணை நடத்தினர். அப்போது  சிவமூர்த்தியை கொலை செய்ததாக அவர்கள், தெரிவித்தனர்.திருப்பூரில் இருந்து அவரை கடத்தி சென்று, மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளியங்காட்டில் கொலை செய்ததாகவும், பிணத்தை அவரது காரிலே எடுத்து வந்து ஓசூர் அருகே உள்ள ஏரியில் வீசி விட்டதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.கோவை கணபதியைச் சேர்ந்த விமல், கவுதமன், மணிபாரதி ஆகிய அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

சிவமூர்த்தி, தம்மிடம் வேலை பார்த்து வந்த புவனேஸ்வரி என்ற பெண்ணிடம் தொடர்பு வைத்து இருந்தார். இதனை கைவிட மறுத்ததால் அவரை, புவனேஸ்வரியின் கணவர் மூர்த்தி, கூலிப்படை ஆட்களை வைத்துக் கொன்றதாக, விசாரணையில் தெரிய வந்தது. கடந்த 25-ஆம் தேதி, சிவமூர்த்தியை கடத்திய அன்றே அவரை கொலை செய்து விட்டதாகவும் 2 நாட்கள், காரில் பிணத்துடன் சுற்றி திரிந்ததாகவும், பின்னர் ஒசூர் அருகே உள்ள ஏரியில் உடலை வீசியதாகவும் தெரிய வந்துள்ளது. கைதான 3 பேர் கொடுத்த தகவலின் பேரில், மூர்த்தியை காரமடையில் வைத்து, திருப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர். ப.சிதம்பரத்தின் உறவினர், கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம், திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்