பிரபல நடிகை திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக செய்திகள் பரவியது உண்மையல்ல, நலமுடன் இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. பிரபல நடிகையும், முன்னாள் காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான திவ்யா ஸ்பாந்தனா, இன்று காலை சுமார் 11 மணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் பரவியது. இதையடுத்து திவ்யா ஸ்பந்தனாவின் மேலாளர் மற்றும் உறவினர்கள் சிலரை தொடர்பு கொண்டு கேட்டபோது அந்த செய்தி முற்றிலும் தவறானது என மறுப்பு தெரிவித்தனர். திவ்யா தற்போது ஜெர்மனியில் இருப்பதாகவும் கூறினர். நெருங்கிய வட்டாரங்களை சேர்ந்த சிலர் திவ்யா ஸ்பந்தனாவை தொடர்பு கொண்ட போது, ஜெனிவாவில் உள்ள ஓட்டலில் தூங்கிக் கொண்டு இருப்பதாகவும், பராகுவே செல்ல உள்ளதாகவும் கூறியதாக தெரிவித்துள்ளனர். நாளையோ அல்லது நாளை மறுநாளோ பெங்களூரு திரும்ப உள்ளதாகவும் அவர் கூறியதாக விளக்கம் அளித்துள்ளனர். இதனிடையே திவ்யா இறந்துவிட்டதாக தவறான செய்தி பரவ சினிமா துறையைச் சேர்ந்த மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் பதிவிட்ட டுவிட்டர் பதிவுதான் காரணம் என தெரியவந்துள்ளது. அந்த பதிவை பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அவர் அதை தனது பக்கத்திலிருந்து நீக்கி உள்ளார். இருப்பினும் இந்த செய்தி வைரலாக பரவியுள்ளது.