இந்தியா, பாகிஸ்தான் இடையே தொடரும் மோதல் - 72 ஆண்டுகளாக நீடிக்கும் பதற்றம்
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர்கள், மற்றும் பாகிஸ்தான் உதவியுடன் அரங்கேற்றப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் குறித்த ஒரு தொகுப்பு
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர்கள், மற்றும் பாகிஸ்தான் உதவியுடன் அரங்கேற்றப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் குறித்த ஒரு தொகுப்பு.
இந்தியா - பாகிஸ்தான் இடையே இதுவரை 4 போர்கள் நடந்துள்ளன. அதில் 1971-ம் ஆண்டு போரை தவிர மற்ற மூன்றுமே காஷ்மீரை மையப்படுத்தியே நடந்துள்ளன.
இந்திய பாகிஸ்தான் போர் 1947
முதல் போர் இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு நடந்தது. இந்து மன்னர் ஹரிசிங் ஆண்டு வந்து ஜம்மு-காஷ்மீர் மாகாணத்தின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்தது. இதனால், இந்தியாவுடன், காஷ்மீரை இணைக்க மன்னர் முன்வந்தார். இதையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ தாக்குதல் நடத்தியது. ஓராண்டு மேல் நீடித்த இந்த போரின் முடிவில், காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக் ஆகிய பகுதிகள் இந்தியா வசமும், ஆசாத் காஷ்மீர், கில்ஜித், பல்திஸ்தான் ஆகிய பகுதிகள் பாகிஸ்தான் வசமும் வந்தன. போர் நிறுத்த கோடை, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான எல்லையாக ஐ.நா. சபை வரையறை செய்தது.
இந்திய பாகிஸ்தான் போர் 1965
அடுத்ததாக, 1965-ம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் மூண்டது. ஆபரேஷன் ஜிப்ரால்டர் என்ற பெயரில் காஷ்மீருக்குள் ஊடுருவி, அதை கைப்பற்றும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மீது போர் தொடுத்தது, இந்தியா. 17 நாட்கள் நடந்த இந்த போரில், இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலக நாடுகளின் தலையீட்டால், தாஷ்கண்ட் ஒப்பந்தம் மூலம் போர் முடிவுக்கு வந்தது.
இந்தியா பாகிஸ்தான் போர் 1971
காஷ்மீரை மையப்படுத்தாமல் வங்கதேச விடுதலையின் போது இந்தியா- பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு போர் நடந்தது. 11 இந்திய வான்படை முகாம்களின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. 13 நாட்கள் நீடித்த இந்த போரில், இந்தியா வெற்றி பெற்றதுடன், பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் விடுதலை பெற்றது.
கார்கில் போர் 1999
1999 ஆம் ஆண்டு இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படைகள், கார்கில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றின. இதையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தது. இரண்டு மாதங்கள் நீடித்த போரில், பாகிஸ்தான் கடும் இழப்புகளை சந்தித்தது. கார்கில் போரில் இந்தியா பெரும் வெற்றி பெற்ற நிலையில், உலக நாடுகளின் அழுத்தத்தால், தனது படைகளை பாகிஸ்தான் திரும்பபெற்றது.
4 முறையும் முதலில் தாக்குதல் நடத்தி போருக்கு காரணமான பாகிஸ்தான், அனைத்திலும் தோல்வியையே தழுவியது. போர்களை தவிர பாகிஸ்தான் ராணுவ உதவியுடன், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள், இந்தியாவில் தாக்குதல்களை அரங்கேற்றின.
நாடாளுமன்ற தாக்குதல் 2001
2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 6 போலீசார் உள்பட 9 பேரை 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டது.
மும்பை தாக்குதல் 2008
இதைதொடர்ந்து 2008 ஆம் ஆண்டு கடல் வழியாக மும்பையில் ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினர், 9 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர். உயிருடன் பிடிப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப், 2012-ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான்.
உரி தாக்குதல், சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2016
2016ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி, காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள ராணுவ பிரிவு தலைமையகத்தில், தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் 19 வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 11 நாட்களுக்கு பிறகு, பாகிஸ்தான் பகுதிக்குள் அதிரடியாக நுழைந்த இந்திய ராணுவம், தீவிரவாத முகாம்கள் மீது அதிரடியாக துல்லிய தாக்குதல் நடத்தியது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
Next Story