வெறுக்கத்தக்கதா பிளாஸ்டிக்?

நெகிழ வைக்கும் பிளாஸ்டிக் தகவல்கள்
வெறுக்கத்தக்கதா பிளாஸ்டிக்?
x
பிளாஸ்டிக் என்றால் அதை வேண்டாதப் பொருளாகத்தான் நாம் பார்க்கிறோம். அதனை தடை செய்ய வேண்டுகிறோம். ஆனால், பிளாஸ்டிக் என்ற பொருள் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது அது இயற்கையை பாதுகாக்கும் பொருளாகத்தான் இருந்தது.

 
அந்தக் காலத்தில் பில்லியர்ட்ஸ் பந்து உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் பலவும் யானைத்தந்ததால் செய்யப்பட்டன. இதற்காக ஏராளமான யானைகள் கொன்று குவிக்கப்பட்டன. செயற்கையான முறையில் யானைத் தந்தத்தை உருவாக்க முடியுமா என உலக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தார்கள். அதன் விளைவாக உருவானதுதான் பிளாஸ்டிக்.

முதன் முதலில் பிளாஸ்டிக்கை உருவாக்கியவர், John Wesley Hyatt என்பவர்தான். இவர் 1869ஆம் ஆண்டு பருத்தி இழைகளையும் கர்பூரத்தையும் பயன்படுத்தி பிளாஸ்டிக்கை தயாரித்தார். இது செல்லுலாய்டு என அழைக்கப்பட்டது. முதன் முதலில் பிலிம் ரோல்கள் செய்யப்பட்டது செல்லுலாய்டு பிளாஸ்டிக்கில்தான். எனவேதான் இன்றைக்கும் சினிமா செல்லுலாய்டு எனக் குறிப்பிடப்படுகிறது.

பருத்தி, கற்பூரம் எல்லாம் இல்லாமல் முழுக்க முழுக்க செயற்கையாக பிளாஸ்டிக் செய்யப்பட்டது. 1907 ஆம் ஆண்டில்தான். இந்த பிளாஸ்டிக் Bakelite என அழைக்கப்பட்டது. இதைப் பயன்படுத்தித்தான் ஷாக் அடிக்காத இன்சுலேட்டட் மின்சார வயர்கள் தயாரிக்கப்பட்டன. 

பிளாஸ்டிக் வரலாற்றில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு நைலான். Wallace Carothers என்பவர் இதனை 1935ல் கண்டுபிடித்தார். மிக மெல்லிய இழையான நைலான், செயற்கை பட்டு என அழைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் கயிறுகள், பாராசூட்கள், ஹெல்மட்டுகள் என எல்லாவற்றிலும் நைலான் முக்கிய பங்கு வகித்தது.

பிளாஸ்டிக்கை இன்னும் இன்னும் மலிவாக எப்படி தயாரிக்கலாம் என ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. பெட்ரோலிய கழிவு மூலம் செலவே இல்லாமல் பிளாஸ்டிக் தயாரிக்க முடிந்தது. இந்த மலிவு விலை பிளாஸ்டிக் மூலம்தான் பிளாஸ்டிக் ரசாயனமயமானது. ஆனால், மலிவான பிளாஸ்டிக்குகள் வந்த பிறகுதான் அமெரிக்கப் பணக்காரர்கள் மட்டுமே அனுபவித்து வந்த ஃப்ரிட்ஜ், கார், பைக், டெலிபோன் போன்றவை மலிவாக தயாரிக்கப்பட்டன. ஏழைகளும் அவற்றை அனுபவித்து மகிழ்ந்தார்கள். 

எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம், கண்ணாடி போலவும் ஆக்கலாம், மெல்லிய சூட்டிலேயே உருக்கலாம்... இதெல்லாம் பிளாஸ்டிக்கின் சிறப்பம்சங்கள். பிளாஸ்டிக் மட்டும் இல்லை என்றால் டிஸ்போசபிள் சிரிங்ஜில் தொடங்கி கையுறை வரை எந்த மருத்துவ உபகரணங்களும் இல்லை. 

பிளாஸ்டிக் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு நாம் வந்துவிட்ட காலம் இது. ஆனாலும் பிளாஸ்டிக்கை ஒரு அளவோடு நிறுத்திக் கொள்ளத்தான் அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள். பசிபிக் பெருங்கடலில் நம் இந்தியா சைஸுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் மிதக்கின்றனவாம். 

முதன் முதலில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் துண்டு கூட, இன்று வரை அழியாமல் ஏதோ ஒரு வடிவத்தில் மறுசுழற்சியாகி நம்மிடையேதான் சுற்றிக் கொண்டிருக்கிறது. உங்கள் டி.வியின் விளிம்புகளில் கூட 150 வருடங்களுக்கு முன் John Wesley உருவாக்கிய பிளாஸ்டிக் கலந்திருக்கலாம். காரணம், பிளாஸ்டிக்குக்கு பிறக்கத்தான் தெரியுமே தவிர இறக்கத் தெரியாது.


Next Story

மேலும் செய்திகள்