கொரோனா நிவாரண முகாமில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் - 23 ஆண்டுகளுக்கு பிறகு மகன்களை பார்த்த தந்தை

தூத்துக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை 23 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இணைத்து வைத்துள்ளது கொரோனா...
கொரோனா நிவாரண முகாமில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் - 23 ஆண்டுகளுக்கு பிறகு மகன்களை பார்த்த தந்தை
x
கொரோனாவால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆங்காங்கே சில நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடந்து வருகின்றன. ஊரடங்கு அமலான நிலையில், தூத்துக்குடியில் சுற்றி திரிந்த வயது முதியோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் வைத்து உணவு அளிக்கும் பணியில் சில சமூக சேவை அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. 

அவர்களில் மனநலம் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் ஒருவரை சுத்தம் செய்யும் படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதையெடுத்து, தூத்துக்குடி இரண்டாம் கேட் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்றும் வெல்டிங் தொழில் செய்து வந்த அவர் தனது மனைவி இறந்ததால், மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்து வந்ததாகவும் சமூக சேவை அமைப்பினருக்கு சிலர் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சமூக சேவை அமைப்பினர் மேற்கொண்ட விசாரணையில் அவருக்கு 2 மகன்கள் இருப்பதும் ஒரு மகன் பழக்கடை நடத்தி வருவதும், மற்றொருவர் திருமணம் செய்யாமல் கோயிலில் சேவை செய்து வருவதும் தெரிய வந்தது. உடனே, வேல்முருகனை குடும்பத்தினருடன் சந்திக்க வைத்தனர். கொரோனாவால் 23 ஆண்டுகளுக்கு பின், குடும்பத்தினரை சந்தித்த வேல்முருகன் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

சந்திப்பை தொடர்ந்து, வேல்முருகனின் மகன் ராமச்சந்தின், தந்தையை தன்னோடு அழைத்துச் செல்ல விரும்பினார். ஆனால், முழுமையான மன நல சிகிச்சை அளித்த பிறகு வீட்டுக்கு அனுப்பி வைப்பதாக சமூக சேவை அமைப்பினர் தெரிவித்தனர். 23 ஆண்டுகளுக்குப் பிறகு, தந்தையும் மகனும் இணைவதற்கு கொரோனா ஒரு காரணமாக அமைந்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்