மக்களை ஈர்த்த சின்னதம்பி யானை : டாப்சிலிப் முகாமில் கதாநாயகன் போல் வரவேற்பு

கோவை தடாகம் பகுதியில் சுற்றிய சின்னதம்பி யானை தற்போது எப்படி இருக்கிறது என்பதை காண, டாப்சிலிப் முகாமிற்கு சென்ற மக்கள் அதிகஆர்வம் காட்டினர்.
x
கோவை மாவட்டம் தடாகம், ஆனைக்கட்டி பகுதியில் சுற்றிய சின்னதம்பி யானை, அப்பகுதி மக்களின் செல்லப்பிள்ளை. ஒற்றை யானை என்றால் எழும் அச்சம், சின்னதம்பியிடம் யாருக்கும் இல்லை. காரணம் அது யாரையும் தொந்தரவு செய்ததில்லை. வயல்களில் இறங்குவதாலும், ஒற்றை யானை என்ற அச்சத்தாலுமே கடந்த ஜனவரியில் சின்னதம்பியை பிடித்து வரகளியாறு வனப்பகுதியில் விட்டனர். ஆனால், அடுத்த நாளே அங்கலக்குறிச்சி முதல், கண்ணாடிபுத்தூர் வரை 100 கிலோ மீட்டர் தொலைவு யாரையும் தொந்தரவு செய்யாமல் கடந்து, மீண்டும் பழைய பகுதிக்கு வந்தான். இந்தச் செய்தி காட்டுத் தீயாக பரவியபோது திரண்ட கூட்டம், பாசப் போராட்டம் நடத்திய சின்னதம்பியின் ரசிகர்களாக மாறிப்போயினர். இன்றளவும் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடிக்க இதுவே காரணம். இந்தச் சூழலில்தான், டாப்சிலிப் முகாமில் நடைபெற்ற பொங்கல் விழாவில் யானைகள் அணிவகுத்தன. ஒவ்வொரு யானையாக வரும்போது, ஏதோ ஒரு ஏக்கத்துடன் இருந்த மக்கள், கடைசியாக, கதாநாயகன் போல் சின்னதம்பியை பார்த்து உற்சாகம் அடைந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சின்னதம்பிக்கு கரும்பும், பழமும் கொடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்