காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் பெண்கள் - நீச்சல், நடை மற்றும் மண் குத்தும் பயிற்சிகள் தீவிரம்

புதுக்கோட்டை பகுதி இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தங்கள் காளைகளை முழு வீச்சில் தயார்படுத்தி வருகின்றனர்.
x
மாணவர்களின் போராட்ட வெற்றிக்கு பின்னர், ஜல்லிக்கட்டு  போட்டி, தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் களைகட்டி வருகிறது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போல் புதுக்கோட்டையிலும் பிரம்மாண்ட போட்டி நடத்தப்படுகிறது. தைப் பொங்கல் தொடங்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளுக்கு பயிற்சி அளிக்க தொடங்கி விட்டனர் புதுக்கோட்டை பகுதி காளை வளர்ப்போர். தச்சங்குறிச்சி, விராலிமலை, மெய்வழிச்சாலை, உப்புபட்டி, காந்திபுரம், மேட்டுப்பட்டி,  கோவில்பட்டி, திருவரங்குளம் பகுதிகளில் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. சின்னகணக்கன்பட்டி இளைஞர்கள்  தங்கள் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கின்றனர். தண்ணீரில் மூச்சை அடக்கி படகை போல் சீறும் காளைகள், களத்தில் மிரட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

பெண்களின் கையில் இருந்து சாதுவாக விடுபடும் காளைகள், மண்ணை கீறி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தின. முதியவரின் தளர்ந்த பிடியில் வரும் காளையும் பார்வையிலேயே அச்சுறுத்துகிறது. மயில காளை, மச்சக் காளை, செவலை காளை, கருங்காலி என தங்களின் முரட்டு காளைகளை குழந்தைகளை போல் பயிற்சிக்கு கூட்டி வருகின்றனர். கூடவே குழந்தைகளும் தான்.

முரட்டு திமிலோடு, பார்வையில் பயமுறுத்தி, சீற்றத்தால் சிதறடிக்கும் காளைகளை மடக்க, காளையர்களும் தயாராகி வருவது, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்