"சுஜித் அழுகுரல் இன்னும் ஒலிக்கிறது" - விஜயபாஸ்கர் வேதனை
சிறுவன் சுஜித்தின் அழுகுரல் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் அவர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாக நினைத்த சுஜித்தின் அழுகுரல், இன்னும் தன்னுள் ஒலிக்கிறது என்றும்.... தன் மனம் வலிப்பதாகவும் தெரிவித்துள்ளார். எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான் உணவு, உறக்கமின்றி இரவு பகலாய் இமைமூடாமல் உழைத்தோம் என்றும், இப்படி எம்மை புலம்பி அழவிடுவாய் என்று எண்ணவில்லை என்றும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். கருவறை இருட்டுபோல் உள்ளே இருப்பாய் என நினைத்தோம்... கல்லறை இருட்டாய் மாறும் என்று எண்ணவில்லை என உருக்கமாக அவர் பதிவிட்டுள்ளார். மருத்துவமனையில் வைத்து உச்சபட்ச சிகிச்சை வழங்க நினைத்து காத்திருந்த தமக்கு, பிணவறையில் பார்க்கும் நிலையில் இதயம் கனத்துக் கிடப்பதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 85 அடி ஆழத்தில் கேட்ட மூச்சுச் சப்தம் தான் மீட்பு பணியில், ஒரு தந்தை ஸ்தானத்தில் பாசப் பிணைப்பில் இணைத்து இயங்க வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மனதை தேற்றி கொள்கிறேன்.... ஏன் என்றால் இனி நீ கடவுளின் குழந்தை என, மீட்புப் பணி களத்தில் இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
Next Story

