சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பேனர் விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம் பெண் உயிரிழந்ததை அடுத்து,  சட்டவிரோத பேனர் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் , சட்ட விரோத பேனர் வைக்க அனுமதி அளித்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினர்.போக்குவரத்து காவல் துறையிடம் அனுமதி பெறாமல் பேனர் வைக்க முடியாது என்ற நீதிமன்ற உத்தரவு அதிகாரிகளுக்கு தெரியும் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதன் தீவிரம் பற்றி அமைச்சர்களுக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்பினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், சட்டவிரோத பேனர்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு மனித உயிர் பறிபோகியிருக்காது என்று வேதனை தெரிவித்தனர். மேலும்,  உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வசூலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.  பேனர் வைக்க மாட்டோம் என அறிவிப்பு விடுத்த அரசியல் கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த வழக்கு விசாரணையை சென்னை காவல் ஆணையர் காண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்