பிரியாவிடை பெற்ற புள்ளி மான்கள் : பாசப்போராட்டம் நடத்திய பராமரிப்பு ஊழியர்கள்

தஞ்சையில் பராமரிக்கப்பட்டு வந்த புள்ளிமான்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால் பிரிவை தாங்க முடியாமல் அதனை பராமரித்த ஊழியர்கள் கலங்கித் தவித்தனர்.
x
தஞ்சை பெரிய கோயில் அருகே உள்ள சிவகங்கை பூங்கா மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. தஞ்சைக்கு சுற்றுலா வருவோர் இங்குள்ள சிவகங்கை பூங்காவையும் பார்த்து செல்வது வழக்கம். 

இந்த பூங்காவில் முயல், மான், நரி, புறா, சீமைஎலி, மயில், பூனை, கிளி, குரங்கு, மரநாய், முள்ளம்பன்றி உள்ளிட்ட விலங்குகளும் பறவைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் இங்கு படகு, தொங்கு பாலம், நீர்ச்சறுக்கு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியோடு திரும்ப செல்வதை பார்க்க முடியும். 

இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள்  8 கோடியே 10லட்சம் ரூபாய் மதிப்பில் செய்யப்பட உள்ளது. இதனால் இந்த பூங்காவில் உள்ள 8 ஆண் மான்கள் உட்பட 41 புள்ளி மான்களை கோடியக்கரை வனப்பகுதியில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த புள்ளி மான்கள், தற்போது வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதால் அதனை பராமரித்து வந்த ஊழியர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

இங்கிருந்த மான்கள் அனைத்தும் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு கோடியக்கரை வனப்பகுதிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகிறது. இதனால் புள்ளிமான்களை குழந்தைகள் போல பராமரித்து வந்தவர்கள் கண்ணீருடன் அதனை வழியனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைத்தது. 

Next Story

மேலும் செய்திகள்